நெல்லை மாவட்டம், காற்குடியைச் சேர்ந்த பதிபூரணம். கடந்த 1994ல் மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் செங்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த நெல்லை 2வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், 1996ல் பதிபூரணத்திற்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், பதிபூரணம் இலவச சட்டப் பணிகள் ஆணையத்தின் மூலம் 2018ல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாமதமாக மேல்முறையீட்டு மனு செய்தார். அதில், கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளேன் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு, ‘‘வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற மூதாட்டியை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார்.
சம்பவத்தின்போது உடனிருந்தவர்கள் நேரில் பார்த்த சாட்சியத்தை பதிவு செய்துள்ளனர். இறந்தவரின் உடலில் பல இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்துள்ளன. இதனால் தான் செங்கோட்டை மருத்துவமனையில் இருந்து தென்காசி அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு மாற்றியுள்ளனர். சாட்சிகள் மற்றும் ஆவண, ஆதாரங்களின் அடிப்படையில் தான் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து, கொலை செய்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனால் ஏற்பட்ட காயத்தால் தான் அவர் இறந்துள்ளார். எனவே, ஆயுள் தண்டனை விதித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.
ஆதிதிராவிடர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட கோரிய வழக்கு - 31ஆம் தேதிக்குள் கட்டுமான பணிகளை தொடங்க நீதிமன்றம் உத்தரவு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கண்மாய் பட்டியைச் சேர்ந்த அழகு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு தாட்கோ மூலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது சுமார் 25 குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறோம் தற்போது இந்த வீடுகள் இடிந்து மோசமான நிலையில் உள்ளன எனவே இந்த வீடுகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித் தருமாறு உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர். அரசுத் தரப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு ஒப்புதலுக்காக உள்ளது ஒப்புதல் கிடைத்ததும் ஆறு மாதத்தில் வீடுகள் கட்டும் பணி முடிக்கப்படும் அதுவரை சமுதாயக் கூடத்தில் தங்கியிருக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது நீதிபதிகள் வீடுகள் மோசமாக உள்ள தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கு நிதி வழங்குவதற்கும் கலெக்டர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் டிசம்பர் 31-க்குள் கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் அது வரையில் தற்காலிக மற்றும் இட வசதி செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் தாங்கள் நேரில் வந்து கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தனர்.