திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வத்திபட்டி அடுத்த கவரயப்பட்டியில் மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இக்கோவிலுக்கு கிராம மக்கள் சார்பில் காளை மாடு வளர்க்கப்பட்டு வந்தது. கவரயப்பட்டி கிராம மக்கள் காளையை தங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக நினைத்து வளர்த்து வந்தனர்.
மந்தை முத்தாலம்மன் கோவில் மாடு அலங்காநல்லூர், பாலமேடு, சிராவயல், தவசிமடை, கொசவபட்டி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாடிகளில் பங்கேற்று களத்தில் தோல்வி காணாத காளையாகவும் புகழ்பெற்ற பல ஜல்லிக்கட்டுக்கு சென்று தங்கம், வெள்ளி, பீரோ, கட்டில் பல பரிசுகளை பெற்று ஊருக்கும் கோயிலுக்கும் பெருமை சேர்த்த இந்த காளைமாட்டை கட்டிப்போடுவதில்லை.
வீடு வீடாக சென்று கிராம மக்கள் தரும் பழம், வைக்கோல் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம். மேலும் வயலில் மேய்ந்தாலும் இந்த மாட்டை விரட்டி அடிக்க மாட்டார்கள். யாரையும் மாடு குத்தாது. அவ்வாறு கிராம மக்களுடன் பாசமாக பழகி வந்த காளை உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது. காளை இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். இறந்த காளைமாட்டின் உடல் அலங்கரிக்கப்பட்டு கோவில் முன்பு வைக்கப்பட்டது.
Watch Video: 111 மீட்டர் சிக்ஸரை தூக்கி ஊன்றிய சிவம் துபே.. பெங்களூரில் தொடர் வாணவேடிக்கை..!
இறந்த கோவில் காளைக்கு மாலைகள் அணிவித்து சந்தனம், ஜவ்வாது, வேஷ்டி, துண்டுகள் போன்றவற்றை அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காளைக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். பின்னர் காளைமாடு அதிர்வேட்டும் முழங்க, தாரை தப்பட்டைகள் அடிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்