திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் உள்ள பாலசுப்பிரமணி ஆயில் மில் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 40). இவர் கடந்த 23.1.2019 அன்று வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்டமிட்டு அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கத்தியால் கலைச்செல்வியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கலைச்செல்வியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு நகைகளை திருடிச்சென்றது திண்டுக்கல்லை அடுத்த நல்லாம்பட்டியை சேர்ந்த ஏழுமலை மகனும், ஆட்டோ டிரைவருமான சந்திரசேகர் (34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த சந்திரசேகர், 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
இதையடுத்து கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதன் பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருப்பூரில் பதுங்கி இருந்த சந்திரசேகரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அதையடுத்து சந்திரசேகருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்த கோர்ட்டு, அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடந்து வந்தது.
Prahlad Modi: பிரதமர் மோடியின் இளைய சகோதரர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..
பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட சந்திரசேகருக்கு கொலை குற்றத்துக்காக 3 பிரிவில் தண்டனை வழங்கப்பட்டது. அதாவது சட்டப்பிரிவு 302-ன் கீழ் ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், 449-வது சட்டப்பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறை, ரூ.1,000 அபராதம், 380-வது சட்டப்பிரிவின் கீழ் 6 ஆண்டுகள் சிறை, ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார். மேலும் இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து சந்திரசேகரை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்