தமிழ்நாடு மாநில அமைச்சரவையில் இணைந்த மூன்று மாதத்திற்குள், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று மாலை 4.30 மணிக்கு டெல்லியில் சந்திக்கிறார்.
அதேபோல், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கையும் அமைச்சர் உதயநிதி சந்திக்க உள்ளார். இந்த உயர்மட்ட சந்திப்பில், உதயநிதி தனது துறைகள் தொடர்பான மாநில அரசின் கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்களுக்கு மீண்டும் ஒருமுறை கோரிக்கைகள் வைக்க இருக்கிறார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றப்போது, அவருக்கு பல துறைகளுடன் இணைக்கப்பட்ட இலாகாக்கள் வழங்கப்பட்டன. உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையும் முதலமைச்சருமான முக ஸ்டாலினுடன் மாநிலத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார். மேலும், தேசிய அளவில் கடந்த ஜனவரி மாதம் ஒடிசா சென்று முதலமைச்சர் நவீன் பட்நாயக்கையும் சந்தித்தார்.
டெல்லி பயணம்:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை டெல்லி சென்று தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். தொடர்ந்து, டெல்லி தமிழ்ச் சங்கத் தலைவர் சக்தி பெருமாள் தலைமையில் டெல்லி முத்தமிழ் பேரவை நிர்வாகிகள், தலைவர் ஆர்.சத்தியசுந்தரம், டெல்லி தமிழ்க் கல்விச் சங்கப் பொதுச் செயலர் ஆர்.ராஜூ ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர். அதனை தொடர்ந்து, முன்னாள் தமிழ்நாடு ஆளுநரும், தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகள்:
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூரைச் சந்தித்து, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்த கோரிக்கை வைப்பார் என்றும், பிப்ரவரி-19 வன்முறையின் போது காயமடைந்த மாணவர்களை விசாரிக்க உதயநிதி ஜேஎன்யுவுக்குச் செல்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவுக்கான அழைப்பிதழ்களையும் சில தலைவர்களுக்கு அவர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.