வேடசந்தூர் அருகே கோவில் பிடி மண்ணை எடுத்து வந்ததால் சாமி குத்தம் ஏற்பட்டு தொழிலாளி இறந்ததாக கூறி மண் எடுத்து வர சொன்னவரின் வீட்டில் இறந்தவரின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே உள்ள பாலத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சக்திவேல்(வயது 33). சக்திவேலின் உறவினர் கருஞ்சின்னூரைச் சேர்ந்த முருகன். இவர் அய்யலூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க நிர்வாகி ராஜமோகன் என்பவருடைய ஆதரவாளர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜமோகனின் தூண்டுதலின் பேரில் முருகன், சக்திவேலிடம் அய்யலூரில் உள்ள வண்டி கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வருமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து சக்திவேல், வண்டி கருப்பணசாமி கோவிலில் இருந்து பிடி மண்ணை எடுத்து வந்து முருகனிடம் கொடுத்துள்ளார். அப்போது முதல் சக்திவேலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சக்திவேலுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த சக்திவேல் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Influenza : சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் அச்சுறுத்தல்: H3N2 இன்ஃப்ளூயன்ஸா வந்தால் இப்படியா? உஷார்
வண்டி கருப்பண சாமி கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்ததால் தெய்வ குத்தம் ஆகிவிட்டது, சாமி தண்டித்து விட்டது. அதனால் தான் சக்திவேல் உயிரிழந்தார் என்று கூறி அவரது உறவினர்கள் சக்திவேலின் உடலை எடுத்துச் சென்று கருஞ்சின்னானூரில் உள்ள முருகன் வீட்டின் முன்னால் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் டி.எஸ்.பி துர்காதேவி, வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சக்திவேலின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது கோவில் பிடிமனை எடுத்து வர சொல்லிய முருகன் மற்றும் ராஜமோகன், சம்பவம் இடத்திற்கு வர வேண்டும், மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை இறந்தவரின் உடலை எடுக்க மாட்டோம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்