சர்க்கரை நோயாளிகளுக்கு H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். உயிருக்கே அச்சுறுத்தலாக அமையலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் சர்க்கரை நோயாளிகள் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று ஏற்படாமல் தஙக்ளை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கின்றனர்.


ஏன் சர்க்கரை நோயாளிகள் ஃப்ளூ தொற்றினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்?   


பீட்ஒ வின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நவ்னீத் அகர்வால், “சர்க்கரை நோயிற்கும் ஃப்ளூ தொற்றுக்கும் இடையே வலிமையான தொடர்பு உள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு வைரஸ் தொற்றுகளும் அதனால் ஏற்படும் தீவிர சிக்கல்களும் அதிகம்” என்கிறார் 


சர்க்கரை நோயால் இரத்த சர்க்கரை அளவுகள் உயரக்கூடும். இது சரியாக கவனிக்கப்படவில்லை என்றால் வேறு பல சிக்கல்களில் முடியக்கூடும். அவ்வகையான சிக்கல்களில் ஃப்ளூ தொற்றும் ஒன்று. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் இன் படி, H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் என்பது ஃப்ளூவின் ஒரு குறிப்பிட்ட வகையாகும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக ஆபத்தானது.


“சர்க்கரை நோய் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, இந்நிலையில் உள்ள நோயாளிகளை ஃப்ளூ போன்ற தொற்றுநோய்களுக்கு அதிக பாதிப்புக்குள்ளாக்குகிறது. இதில் குறிப்பாக H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இவ்வாறு செயல்பட்டு நோயளிகளுக்கு தீவிர விளைவுகளையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தையும் உண்டாக்கும். அவர்களது சுவாசப் பாதை பாதிப்புக்குள்ளாகும். அதனாலேயே சர்க்கரை நோயாளிகள் தடுப்பூசிகள் எடுத்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அகர்வால் கூறியிருக்கிறார். 


சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த தொற்று சுவாசப் பாதையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பல்ஸ் ஆக்சிமீட்டரின் உதவியுடன் ஆக்ஸிஜனின் அளவை தொடர்ந்து சரிபார்க்கவும். ஆக்ஸிஜன் செறிவூட்டல் அளவு 95 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், மருத்துவரை அணுகுவது கட்டாயமாகும்.


ஆக்ஸிஜன் செறிவு நிலை 90 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், தீவிர சிகிச்சை தேவைப்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சுயமாக மருந்துகளை உட்கொள்ள கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


H3N2 வைரஸ் என்றால் என்ன?


இது ஒரு இன்ஃப்ளூயன்ஸா (குளிர்காய்ச்சலை ஏற்படுத்தும்) வைரஸ். இது சுவாச நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் பறவைகள் மற்றும் பாலூட்டிகளையும் பாதிக்கலாம். பறவைகள் மற்றும் பிற விலங்குகளில், H3N2 உருமாறிய வைரசாக மாறும் தன்மை கொண்டுள்ளது. அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, மனிதர்களிடையே ஏற்படும் குளிர்காய்ச்சலுக்கு முக்கிய காரணி H3N2 வைரஸ்.


H3N2 வைரஸின் அறிகுறிகள் என்ன?


பறவை காய்ச்சல், பன்றி காய்ச்சல் என பிற விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பறவும் நோய்த்தொற்றால் ஏற்படும் லேசான சுவாச தொற்று (காய்ச்சல் மற்றும் இருமல்) முதல் கடுமையான நுரையீரல் நோய் வரை, கடுமையான சுவாசக் கோளாறு தொடங்கி மரணம் வரை கூட இந்த H3N2 வைரஸ் இட்டு செல்லும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


குளிர்
இருமல்
காய்ச்சல்
குமட்டல்
வாந்தி
தொண்டை வலி
தசைகள் மற்றும் உடலில் வலி
சில சந்தர்ப்பங்களில், வயிற்றுப்போக்கு, தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல்


சுவாசிப்பதில் சிரமம், மார்பில் வலி அல்லது அசௌகரியம், தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை யாரெனும் அனுபவித்தால், மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.