புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவதில் சூத்திரதாரியாக செயல்பட்ட மணிஷ் காஷ்யப் மீது தமிழ்நாட்டில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. புலம்பெயர் தொழிலாளர் பற்றி வதந்தி பரப்பியது மட்டுமின்றி ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மணிஷ் காஷ்யப்.
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி:
வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் காஷ்யப் வங்கி கணக்குகளை பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் முடக்கியது. பீகாரில் கைதானவரை தமிழ்நாடு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல்துறையால் முடக்கப்பட்டுள்ள காஷ்யப்பின் 4 வங்கிக் கணக்குகளில் ரூ.42.11 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காஷ்யப்பின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம், வதந்தி பரப்புவதற்காக வழங்கப்பட்டதா என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை எடுக்க மணிஷ் காஷ்யப்புக்கு உதவியவர்கள் யார் எனவும் காவல்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் யூடியூபர் மணீஷ் காஷ்யப் பீகார் போலீசாரால் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது மதுரை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிவாரண்ட் அடிப்படையில் தனிப்படை போலீசார் பீகார் சென்று அவரை மதுரை அழைத்து வந்து மாவட்ட நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி டீலா பானு முன்பு பீகார் யூடியூபர் மனீஷ் காஷியப் ஆஜர் படுத்தப்பட்டார். யூடியூபர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஒரே குற்றத்திற்கு பீகார், மதுரை,திருப்பூர் என பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் இவரை முறையாக கைது செய்வதற்கான ஆவணம் சமர்பிக்காமல் காவல்துறை இவரை கைது செய்து அழைத்து வந்து இருக்கிறார்கள். எனவே அவருக்கு பெயில் வழங்க வேண்டும். போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கூடாது என கடந்த விசாரணையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ”இவர் தவறான வீடியோ பதிவின் மூலம் நாட்டு மக்கள் மத்தியில் இருக்கும் சகோதரத்துவம் சீர்குலைக்கப் பார்க்கிறார். இவரை கைது செய்து போலீசார், விசாரணைக்குட்படுத்தினால் மட்டுமே இவரின் பின்னால் மூளையாக செயல்பட்டவர் யார் என தெரிய வரும்” என்றார். மேலும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப்பிற்கு மார்ச் -30 முதல் ஏப்.3 தேதி வரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய அனுமதி அளித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நடுவர் நீதிபதி டீலா பானு உத்தரவு வழங்கினார். இந்நிலையில் தற்போது ஏப்ரல் 5 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்