திண்டுக்கல் - மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு அருகே பெட்டிசெட்டியபட்டி பிரிவு என்ற இடத்தில் மர்ம நபர்களால் கூலி தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டை அடுத்த காந்திநகரில் வசித்து வரும் மரம்வெடும் கூலித்தொழிலாளி அழகர்சாமி வயது(52). இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு எட்டு மணியளவில் வழக்கம்போல தோட்டத்திற்கு சென்று வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது, திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கன்னிமார்நகர் பிரிவு என்ற இடத்தில் வந்தபோது மர்ம நபர்கள் இருவர் வழிமறித்து சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்மையனாயக்கனூர் காவல்துறையினர் அழகர்சாமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குறுக்கே வந்த நாய்.. நொறுங்கிய கார்.. நான்கு மாணவர்கள் உயிரிழப்பு.. நடந்தது என்ன ?
அதில், மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேவுள்ள கோட்டையூரைச் சேர்ந்த வேங்கையன் மகன் சிவா(24) என்பவர் பெட்டிசெட்டியபட்டி கிராமத்தில் திருமணம் முடித்து அங்கேயே வசித்து வந்ததாகவும் நேற்று அழகர்சாமிக்கும் சிவாவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே ஊரில் வசித்து வரும் ராமசாமி மகன் பாலு(28) வுடன் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என்று தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அம்மையநாயக்கனூர் சார்பாக ஆய்வாளர் தயாநிதி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.