தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் கடந்த மாதமே முடிவடைந்துவிட்ட நிலையில், அவரை மாற்றுவது தொடர்பாகவோ அல்லது அவரே தொடர்ந்து நீடிப்பார் என்பது போலவோ குடியரசுத் தலைவர் மாளிகை இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.
நாகலாந்து டூ தமிழ்நாடு – சென்னை வந்த ரவி
நாகலாந்து ஆளுநராக கடந்த 2019ல் நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி, 2 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டின் ஆளுநராக மாற்றப்பட்டார். அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஒரு ஆளுநரின் பதவி காலம் 5 ஆண்டுகள் என்ற நிலையில், நாகலாந்து, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களில் ஆளுநராக பணியாற்றிய ஆர்.என்.ரவி அந்த ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். ஆனாலும், அவரே இன்னும் தமிழ்நாட்டின் ஆளுநராக தொடர்கிறார்.
புதிய ஆளுநர்கள் பட்டியலில் ரவி பெயர் இல்லை
சமீபத்தில் ஜார்கண்ட், மகாராஸ்ட்ரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்த குடியரசுத் தலைவரின் உத்தரவில் தமிழ்நாடு ஆளுநர் குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. அதனால், தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவியே தொடருவார் என்று கூறப்பட்டது. ஆனாலும், அவரே தொடருவாரா என்ற அதிகாராப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடவில்லை.
ஆளுநர் மாநாட்டில் பங்கேற்கும் ஆர்.என்.ரவி
இந்நிலையில், இன்று குடியரசுத் தலைவர் தலைமையில் நடைபெறும் மாநில ஆளுநர்களின் மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவரை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய மாநாட்டிற்கு இன்னும் சில மாநில ஆளுநர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாகவும், ஆளுநர் ரவியின் நிலை என்ன என்பதும் இன்று அல்லது நாளை தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு அரசு ?
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதல் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே முரண்பாடுகளும் மோதல் போக்கும் நிலவி வந்தது. ஒரு கட்டத்தில் ஆளுநரை நேரடியாக தாக்கி பேசும் அளவிற்கு அது வளர்ந்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியது. ஆளுநர் ரவியோ திராவிடம் குறித்தும் சனாதனம் பற்றியும் திருவள்ளூவர் தொடர்பாகவும் பல்வேறு சர்ச்சையான கருத்துகளை பேசுவதையே வழக்கமாக வைத்துக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில், அவருடைய ஆளுநர் பதவி காலம் முடிவடைந்துள்ளது.
ஆனால், இன்னும் ராஜ்பவனை விட்டு கிளம்பாத ஆர்.என்.ரவி, குடியரசுத் தலைவர் எந்த உத்தரவையும் பிறப்பிக்காத நிலையில், அவரே ஆளுநராக தொடர்ந்து வருகிறார். தமிழ்நாடு அரசு இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் சொல்வது என்ன ?
இந்த விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்களில் விசாரித்தபோது, ஆர்.என்.ரவியே தொடர்ந்து ஆளுநராக நீடிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் மாளிகையை விட்டு கிளம்புவதற்கான எந்த சிறு நகர்வுகளும் தெரியவில்லை என்று தெரிவித்தனர். இதனால், திமுக ஆட்சி முடிந்து மீண்டும் தேர்தல் நடக்கவுள்ள 2026ஆம் ஆண்டு வரை ஆளுங்கட்சியான திமுகவிற்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் ஆர்.என்.ரவியையே தமிழ்நாடு ஆளுநராக தொடர அனுமதியளிக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசு சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது