" ஊருக்கு கடைசி உலகம்பட்டி" என்பார்கள். இது செட்டிநாட்டின் சொலவடை. நகரத்தார் மக்களின் சொலவடை மட்டுமல்ல, அவர்கள் உண்ணும் உணவு, வசிக்கும் வீடு, சீர்வரிசை, பாத்திரங்கள், உடைகள், ஆபரணங்கள் என எல்லாவற்றிலும் தனித்துவம் காட்டுவார்கள். தை மாதத்தில் அவர்கள் கொண்டாடும் செவ்வாய் பொங்கல் சிறப்பானது. பல்வேறு இடங்களிலில் செவ்வாய் பொங்கல் அருகிப் போனாலும். நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட செட்டிநாடு கிராமங்களில்  இன்னும் உயிர்ப்போடு செவ்வாய் பொங்கல் கொண்டாடப்படுகிறது.



நாட்டரசன் கோட்டையில் செவ்வாய் பொங்கல் எப்படி சிறப்புடையதோ, அதைப் போல் தேவப்பட்டு கிராமத்தில் புதுத் தண்ணீரில் பொங்கல் வைக்கும் விழாவும் மிகவும் சிறப்புடையது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது, தேவபட்டு கிராமம். இந்த கிராமத்தில் புதுத் தண்ணீர் எடுத்து பொங்கலை ஆண்கள் மட்டும்  இறைவனுக்கு படைக்கும் பழக்கம் பாரம்பரியமானது. அதே போல் தேவபட்டு கிராமத்திற்கு மஞ்சுவிரட்டு பார்க்க  வரும் அனைவருக்கும் விருந்து உபசரிக்கும் பண்பு நெகிழ்ச்சியுடையது.



தேவபட்டு பொங்கல் விழா குறித்து கிராமத்தினர், “எங்கள் ஊரில் அறுவடைக்குப்பின் ஒவ்வொரு வருடமும் தை மாதம் வரும் இரண்டாவது செவ்வாய்கிழமை கிராமத்தில் அமைந்துள்ள அந்தர நாச்சியம்மனுக்கு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் படி இன்று கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் , பெரியவர்கள் கல்லல் மணிமுத்தாறு பகுதியில் ஊற்று தோண்டி அதில் புதிதாக ஊறி வரும் தண்ணீரை எடுத்து பனை மட்டை மூலம்,  மண்பானையில் சேகரித்து வந்து  பொங்கல் வைக்கும் வினோதா திருவிழா  நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்ட பின் படையில் இடப்பட்டு ஆண்கள் மட்டுமே உண்பார்கள் இந்தப் பழக்கம் எங்களுடைய மூதாதையர் காலத்தில் இருந்து தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வைக்கப்படும் வெள்ளை பொங்கலுக்கு, மஞ்சள் பூசணி என்று சொல்லப்படும் பரங்கிக்காய் கூட்டும் செய்வோம். இதனால் எங்களது கிராமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில்  விவசாயம் செழிக்கவும்  தலைமுறைகள் தழைத்தோங்கவும் ஆண்கள் பொங்கல் வைத்து வழிபாட்டை கடைபிடிக்கிறோம். இந்த நேரத்தில்  பெண்கள் கண்டிப்பாக வீட்டில் இருப்பார்கள் இப்படியான கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்கிறோம்" என்றனர்.



கோயில் குளம் தான் ஊருக்கு அழகு. கோயில் இல்லா ஊர விலக்கு என்று சுப்ரமணியபுரம் படத்தில் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கும். அதை நிரூபிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கோயில் குளங்கள் அதிகமாக இருக்கின்றனர். இதன் தொடர்ச்சியான கலாச்சாரங்களும் பழக்கத்தில் உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.