தமிழ் கடவுள் என அழைக்கப்படும் முருகப்பெருமானின் 3 ஆம் படை வீடான பழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 21ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. பழனி தைப் பூசத் திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பாதயாத்திரை பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசித்து சென்றனர்.




தைப்பூசத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுவினர் சார்பில், சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பழனி தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுவினர் காங்கேயம், வட்ட மலை, தாராபுரம் வழியாக இன்று பழனியை வந்தடைந்தனர்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!




கடந்த 360 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக வரும் எடப்பாடியை‌ சேர்ந்த பருவத ராஜகுல காவடி குழுவினர் பழனிகோவிலுக்கு வந்து இரவு நேரமும் பழனி மலைக்கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட செப்புப்பட்டயம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இன்று பழனி வந்த எடப்பாடி காவடிக் குழுவினர்  காலை சண்முகநதி ஆற்றங்கரையில் குளித்து பழனி மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபாடு செய்தனர். இவர்கள் இன்றிரவு மலைக்கோயிலிலேயே தங்கி நாளை முருகனை தரிசனம் செய்யவுள்ளனர். இந்நிலையில் கொரோனா காரணமாக இம்முறை மலைக்கோயிலில் குறைவான பக்தர்கள் மட்டும் தங்குமாறு கோயில் நிர்வாகத்தால் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.





எடப்பாடி காவடிக் குழுவில் அன்னதான குழு, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழு என பல்வேறு குழுக்கள் உள்ளன.  10 டன் வாழைப் பழங்கள், 5 டன் சர்க்கரை, 2.5 டன் பேரீச்சம் பழம், 1 டன் கற்கண்டு, 250 கிலோ தேன், 250 கிலோ நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவற்றை பயன்படுத்தி பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு காவடிக்குழுவில் வருகை தரும் பக்தர்களுக்கு சுமார் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்து வழங்கப்பட்டது.



 


ராட்சத அண்டாக்களில் வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கலந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டது. தரிசனம் செய்தபின் எடப்பாடி பக்தர்கள் ஊருக்கு திரும்பிச் செல்ல சேலம் மாவட்ட போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயில் நிர்வாகம் சார்பில் சண்முகநதி ஆற்றுப்பகுதியில் முடி காணிக்ககை மற்றும் கழிப்பிட வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.