’ ஜல்லிக்கட்டு ‘ போராட்டத்திற்கு பின் தமிழகத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டது. பழமையை நேசிக்க வேண்டும் என்ற குரல் தன்னெழுச்சியாகவும் விதைக்கப்பட்டது. இதனால் உணவு முறைகளைக் கூட பெரும்பாலானோர் மாற்றிக் கொண்டனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீட்புக்கு பிறகு அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வாங்கி வளர்த்து வருகின்றனர். அந்த காளைக்கு பிறந்தநாள் அன்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதோடு கிடா விருந்தும் ஏற்பாடு செய்து அசத்தியுள்ளனர்.
இது குறித்து அலங்காநல்லூர் கிராம இளைஞர் லோகு நம்மிடம்...” ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான முதல் தீ அலங்காநல்லூரில் வைக்கப்பட்டது. இது சென்னை மெரினா கடற்கரையில் மெகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த தமிழினமே போராட்டத்தில் குதித்தது. ஜல்லிக்கட்டு போராட்டம் மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது. இதனால் எங்கள் கிராம இளைஞர்கள் சிலர் ஜல்லிக்கட்டு காளங்கன்று ஒன்றை வாங்கினோம். அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் சார்பாக கன்றை அவிழ்த்து, தொடர்ந்து வளர்த்து வருகிறோம்.
மே -1ம் தேதி எங்களிடம் இந்த காளை வந்ததால் அந்த நாளையே கன்றின் பிறந்தநாளாக எண்ணி வெகு விமர்சையாக கொண்டாடுகிறோம். “ கரிகாலன்’ என்று தான் எல்லோரும் அழைப்போம். பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் வென்று பரிசுகளை பெற்றுள்ளது. அப்படி கிடைத்த பணத்தில் ஆட்டுக் குட்டி ஒன்றையும் வாங்கி வளர்த்தோம். அந்த ஆட்டுக்குட்டியை நேற்று முனியாண்டிக்கு பலியிட்டி காளையின் பிறந்தநாளுக்கு கறி சோறு வழங்கினோம். முனியாண்டி கோயிலுக்கு வந்த ஒவ்வொரு நபரையும் சாப்பிட வைத்தோம். முன்னதாக கேக் வெட்டி, கேசரி மற்றும் இனிப்புகளை வழங்கினோம். ஒலி பெருக்கி வைத்து கரிகாலனின் பிறந்தநாளை கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். அலங்காநல்லூரில் ’ ஜல்லிகட்டு ‘ காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி அன்னதானம் வழங்கிய இளைஞர்களை பலரும் பாராட்டினர்.