மதுரை மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் தேசிய மருத்துவ கமிஷன் பரிந்துரைத்த, ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கிய உறுதிமொழியை மாணவர்கள் எடுத்ததால், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று முன் தினம் மதுரை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, ஆட்சியர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், 2018ஆம் ஆண்டு மாணவர்கள் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.  இந்நிலையில், பாரம்பரிய ஹிப்போகிராடிக் உறுதிமொழிக்கு பதிலாக, இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சமஸ்கிருத வார்த்தைகள் கொண்ட உறுதிமொழியை ஆங்கிலத்தில் மாணவர்கள் எடுத்துள்ளனர்.



அமைச்சர் பிடிஆருடன் நிகழ்ச்சியில் டீன் ரத்தினவேல்


இந்நிலையில், பாரம்பரிய உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருத உறுதிமொழி எடுத்ததாக தகவல் தீ போல் பரவிய நிலையில், மருத்துவ கல்வி இயக்ககம் டீன் ரத்தினவேலுவை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.


இந்நிலையில், இந்த நடவடிக்கை தொடர்பாக டீன் டாக்டர் ரத்தினவேலுவை தொடர்புகொண்டு பேசினோம். இது திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டதா ? இதற்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற நம்முடைய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் :


டீன் டாக்டர் ரத்தினவேல் : எப்போதும் மாணவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர்கள். அதன்படியே, இந்த நிகழ்வையும் மாணவர் செயலரே ஒருங்கிணைத்தார். அதன்படி, தேசிய மருத்துவ ஆணைய இணையதளத்தில் இருந்த அந்த ‘மகரிஷி சரக் சபத்’ என்ற வாக்கியம் அடங்கிய உறுதிமொழியை எடுத்து வாசித்திருக்கின்றனர்.



டீன் டாக்டர் ரத்தினவேல்


ஆனால், அதுவும் சமஸ்கிருதத்தில் வாசிக்கப்படவில்லை. ஆங்கிலத்திலேயே அந்த உறுதிமொழி வாசிக்கப்பட்டது. இங்க யாருக்கு சமஸ்கிருதம் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ தெரியும் ? அதோடு, அவர்கள் இந்த உறுதிமொழியை படித்த பிறகுதான் எனக்கே தெரியும். அதுவரை எனக்கு இதைதான் படிக்கப்போகிறார்கள் என்று கூட தெரியாது.


இது மாணவர்களால் எடுக்கப்பட்டது. எப்போதும் வாசிக்கப்படும் உறுதிமொழி என்பதாலேயே நான் உள்பட யாரும் அதில் என்ன மாற்றம் செய்துவிடப்போகிறார்கள் என்று கவனிக்காமல் இருந்துவிட்டோம்.  நான் ஒருபோதும் ஹிப்போகிராடிக் உறுதி மொழிக்கு பதிலாக, ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கியம் கொண்டு உறுதி மொழியை வாசிக்க வேண்டும் என்று சொல்லவில்லை ; அது பற்றி எனக்கு உண்மையிலேயே தெரியாது.


இது பற்றி என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல், சமஸ்கிருதத்திலேயே முற்றிலும் உறுதிமொழி வாசிக்கப்பட்டதாக நினைத்து என் மீது நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். யார், இதை எப்படி மருத்துவ அமைச்சருக்கும் மருத்துவ கல்வி இயக்கத்திற்கும் கொண்டு போய் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை.


என்னிடம் வாய் வார்த்தையாக கூட எதுவும் கேட்காமல், எந்த விசாரணையும் செய்யமல், தவறான புரிதலின் அடிப்படையில் என் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். சனிக்கிழமை நிகழ்ச்சி நடைபெற்றது, ஞாயிற்றுக் கிழமை மதியம் என்மீதான நடவடிக்கை ஆர்டர் கொடுத்துட்டாங்க. முதல்வர் இதை கவனித்து, உண்மையை கண்டறிந்து என் மீதான நடவடிக்கையை திரும்ப பெறவேண்டும் என டீன் ரத்தினவேல் நம்மிடம் தெரிவித்தார்.


இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ரத்தினவேலை தனக்கு நன்றாக தெரியும் என்றும், கொரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றியவர் அவர் என்றும், மாணவர்கள் செய்த செயலுக்கு, ரத்தினவேல் மீது நடவடிக்கை எடுத்திருப்பது சரியான நடவடிக்கை இல்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.





சமூக வலைதளங்களில் பரவும் தகவலை அப்படியே உண்மை என்று நம்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், டீன் விவகாரத்தில் கூட தீர விசாரணை செய்யாமல் சமஸ்கிருதத்தை எதிர்க்கிறோம் என்ற ஒரே கருத்தை மட்டும் பிடித்துக்கொண்டு அரசு செயல்பட்டிருப்பதாகவும் மருத்துவ கல்லூரி மாணவர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.