தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நேற்று முன்தினம் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்படி அன்று இரவு பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியில் இருந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர்.
தகராறு:
இதேபோல் பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினரும் மாலை அணிவிக்க சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே சிலைக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகுளம் போலீசார் அங்கு சென்று இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், அங்கிருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தகராறாக மாறியது. அதில் அம்பேத்கர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த நாற்காலிகள் மற்றும் அருகிலிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் தென்கரை தண்டுபாளையம் அருகே ஒரு இரண்டு சக்கர வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் சிலரை பிடித்து பெரியகுளம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு காவல் நிலையத்தின் முன்பு வாலிபர்கள் கூட்டமாக நின்றனர். அப்போது அவர்கள் காவல் நிலையம் மீது சரமாரியாக கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறைக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ், இரண்டு சக்கர வாகனங்களின் கண்ணாடிகள் சுக்குநூறாக நொறுங்கின.
போலீஸ் குவிப்பு:
இதையடுத்து பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த ஒரு அரசு பேருந்து மறித்து அதன் கண்ணாடியையும் உடைத்தனர். காவல் நிலையம் மீது கற்கள் வீசியதில் அய்யண சக்கரவர்த்தி, சுருளிவேல், சரவணன், சதாம் உசேன், கவாஸ்கர் ஆகிய 5 போலீசார் காயம் அடைந்தனர். பின்னர் போலீசாா் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி சென்று சிலரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதற்கிடையே தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாா்வையிட்டார். மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் ஆகியோரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட போலீசார் பெரியகுளத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
60 பேர் கைது:
அவர்கள் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் அம்பேத்கர் சிலை அருகே உள்ள கடைகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டது. பெரியகுளத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களும் மாற்றுப் பாதையில் போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. பெரியகுளத்தில் உள்ள மதுபான கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே காவல் நிலையம் மீது கல்வீசி தாக்குதல், பேருந்து, ஜீப், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு, போலீசாரை தாக்கியது தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 60 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பெரியகுளம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்