காவல்துறையின் தீவிர கண்காணிப்புடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணி, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடக்கிறது.


ஆர்.எஸ்.எஸ். பேரணி:


உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து காவல்துறை அனுமதியுடன் தமிழ்நாட்டின், 45 இடங்களில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் சீருடை அணிந்து பேரணியில் ஈடுபட உள்ளனர். இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின்  தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில தலைவர் வன்னியராஜன், சென்னையில் கொரட்டூர், ஊரப்பாக்கம்,  திருவள்ளூர், அரக்கோணம்,  செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சீருடை அணிவகுப்பும், பொதுக்கூட்டமும் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.  அதன்படி, கொரட்டூரில் இன்று மாலை 3 மணிக்கு அணிவகுப்பும் அதன் முடிவில்  விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில்  பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.  இதையடுத்து மாவட்ட தலைநகரங்களிலும், பேரணி நடைபெறும் பகுதிகளிலும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.


காவல்துறை நிபந்தனைகள்:


அதேநேரம் பேரணியின்போது பின்பற்ற காவல்துறை பல்வேறு நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது. அதில்,



  • நிகழ்ச்சியின் போது யாரும் பாடல்கள் மற்றும் சாதி, மதம் ரீதியாக எந்த கருத்துகளையோ பேசக்கூடாது

  • நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது

  • பேரணியில் கலந்து கொள்வோர் லத்தி, கம்பு, இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை

  • பேரணி அனுமதிக்கப்பட்ட இடங்களில் சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே பேரணிக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்

  • பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பேரணி நடத்த வேண்டும்

  • பேரணியில் போது எந்தவொரு பொது அல்லது தனியார் சொத்துக்கள் சேதமடைந்தாலும் அதற்கான இழப்பீடு கொடுக்கப்படும் என உறுதிமொழி அளிக்கவேண்டும்

  • மேற்கூறப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றாத நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

  • காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்பிக்கள் ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படாத வகையில் இடத்தினை தேர்வு செய்து, சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக நிகழ்ச்சிகளை முடிக்க அறிவுறுத்த வேண்டும்

  • பிரச்னைக்குரிய இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும்


பேரணி வழக்கு விவரம்:


சட்ட ஒழுங்கை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுப்பாடுகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரச்னைக்குரிய இடங்களில்  பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஆனால், சட்ட ஒழுங்கை காப்பது  மாநில அரசின் கடமை, அதற்காக பேரணியை  தடுப்பது நியாயமல்ல என ஆர்எஸ்எஸ் தரப்பு வாதிட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. அதைதொடர்ந்து, தமிழகத்தின் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணியுடன், பொதுகூட்டமும் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற உள்ளது.