பிரபல சாராய வியாபாரி

 

செங்கல்பட்டு மாவட்டம் பொன் விளைந்த களத்தூர், பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் துலுக்காணம்(65), இவரது மனைவி சம்பூர்ணம்(58), இவர்களுடைய மகள் ஜெயந்தி (30). இவர்களுடைய மகளை கடந்த 12 வருடங்களுக்கு முன்பு, பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் டார்ஜன் (35) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

 

டார்ஜன் கடந்த 2014 ஆம் ஆண்டு வரை சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணமான சில வருடங்களில் சாராய வியாபாரத்தை கைவிட்டு விட்டு, கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வந்து உள்ளனர்.

மனைவியை துன்புறுத்திய கணவன்

 

டார்ஜன், தொடர்ந்து மதுவுக்கு அடிமையாகி உள்ளார். அடிக்கடி ஜெயந்தியை பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.  அதே பகுதி என்பதால் ஜெயந்தியின் தாய், தந்தை இருவரும் டார்ஜனை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி இரவு போதை தலைக்கு ஏறிய டார்ஜன், தனது மாமனார் துலுக்காணம் மற்றும் மாமியார் சம்பூர்ணம் ஆகிய இருவரை சரமாரியாக கட்டை மற்றும் வீட்டில் இருந்த கத்தி ஆகியவற்றை வைத்து தாக்கியுள்ளார்.



 

போதையில் மாமனாரை கொலை செய்த மருமகன்

 

இதில் துலுக்கானோம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த சம்பூர்ணத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த கொலைக்கு வழக்கில் கடந்த 8 மாதங்களுக்கு முன் டார்ஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



 

மச்சானை போட்டுத்தள்ளிய மகன்கள் 

 

டார்ஜன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளிவந்த செய்தி அறிந்த துலுக்கானத்தின் மகன் சூர்யா வயது 25 மற்றும் துலுக்கானதத்தின், தம்பி மகன் லோகேஷ் வயது 24 ஆகிய இருவரும் பழிக்கு பழியாக நேற்று இரவு வீட்டில் டார்ஜனை சரமாரியாக வெட்டி தலையை துண்டித்து தனது தந்தை கொலை செய்யப்பட்ட இடத்திலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர். இச்சம்பவம் அறிந்த செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறையினர் கொலையுண்ட டார்ஜன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சூர்யா மற்றும் அவரது சகோதரரான லோகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையை கொன்ற அதே இடத்தில் மைத்துனரின் தலையை மகன்களே பழிக்கு பழியாக வெட்டி வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.