நண்பனை பார்க்க சிறைக்கு போவதற்காக தெருவில் நின்ற சொகுசு காரை பெட்ரோல் ஊற்றி எரித்தும், கல்லை தூக்கிபோட்டு உடைத்த இளைஞர் கைது செய்யப்பட்ட சுவாரஸ்யம்.

 

வீட்டு வாசலில் சொகுசு காரை நிறுத்திய உரிமையாளர்

 

மதுரை மாநகர் செல்லத்தம்மன் கோயில் புதுத்தெரு பகுதியில் வசித்துவரும் சுப்ரமணியன், என்பவர் தனக்கு சொந்தமான சொகுசு காரை வீட்டின் முன்பு எப்போதும் போல் நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு 12 மணியளவில் திடீரென தனது காரை உடைப்பது போன்ற சத்தம் கேட்டு வெளியில வந்துபார்த்துள்ளார். அப்போது சொகுசுகாரின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தபடி இருந்துள்ளது. மேலும் காரின் கண்ணாடி கல்லால் உடைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்ரமணியன் காவல்துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு தீயை அணைத்துள்ளார். 

 


 

ஜெயிலுக்கு போக காரை எரித்தேன்

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் சம்பவம் குறித்து அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து காரை தீயிட்டு கொளுத்திய நபரான  கீழமாசி வீதி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (21) என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். இதையடுத்து சிவக்குமாரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். சிவகுமார் அளித்த வாக்கு மூலத்தை கேட்டு காவல்துறையினரே அதிர்ச்சியடைந்துள்ளனர். சிவக்குமார் அளித்த வாக்குமூலத்தில் ”தனது நண்பரான மதுரை வடக்குமாசி வீதி கருக்குவாலையன் தெரு பகுதியை சேர்ந்த தினேஷ் (25) சிறையில் உள்ளதாகவும், அவரை பார்ப்பதற்காக இது போல செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து சிவக்குமாரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். நண்பனின் நட்புக்காக ஜெயிலுக்கு போவதற்காக சம்மந்தமே இல்லாத நபரின் காரை எரித்து உடைத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

கடுமையான நடவடிக்கை தேவை

 

இது குறித்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில்..,” தனது நண்பனை பார்க்க வேண்டும் என பிறரின் சொத்தை சேதப்படுத்துவது எந்த வகையில் நியாயம். இது போன்ற ஆர்வக் கோளாறுகளுக்கு முறையான பாடம் கொடுக்க வேண்டும். அப்போது தான் மீண்டும் இது போன்ற தவறுகளை யாரும் செய்ய மாட்டார்கள். அதே போல் மதுரை மாநகர் பகுதிக்குள் ஆயுதங்களுடன் பைக்குளில் சுற்றி வரும் இளைஞர்களை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் பங்களா அருகில் உள்ள அரசு குடியிருப்பு பகுதியில் சில வீடுகள் சேதமடைந்துள்ளது. இங்கு ஆள் இல்லாத வீடுகள், மது பிரியர்களின் கூடாரமாக உள்ளது. மேலும் கஞ்சா விற்பனை செய்யும் மையாகவும் மாறி வருகிறது. எனவே இது போன்ற விசயங்களை தவிர்க்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்