மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா என்ற சிவக்குமார், பங்களாதேஷ் நாட்டில் நடைபெறுகின்ற மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகி உள்ளதாகவும், பங்களாதேஷ் நாட்டிற்கு செல்ல பயணச்செலவு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காகவும் நிதியுதவி வேண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார். அதன்படி மதுரை  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தன் விருப்புரிமை நிதியிலிருந்து சி.சிவக்குமாருக்கு நிதி உதவியாக ரூ.25,000-க்கான காசோலையை வழங்கினார்.

 

மேலும் சிவக்குமார்  பங்கேற்கும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் சிறப்புடன் பங்கேற்று வெற்றியுடன் திரும்பிவிட பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.






மதுரை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்  சச்சின் சிவாவிடம் பேசினோம். "கடந்த 12 வருடங்களாக தமிழ்நாட்டு அணிக்கும், கடந்த நான்கு வருடமா இந்திய அணிக்காவும் கிரிக்கெட் விளையாடி வருகிறேன்.  இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக பணி செய்துள்ளேன். எனக்கு இடது காலில் சற்று பாதிப்பு இருக்கும். 40% பாதிப்பை கொண்டு விளையாடி வருகிறேன்.  ஐ.பி.எல் போல விளையாடப்படும் (டி.பி.எல்) திவாங் பிரிமியர் லீக் தூபாயில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் தமிழக அணி சேம்பியன் சிப்பை தட்டியது. இதற்கு கேப்டனாக பணி செய்தேன். இதற்கு கமலஹாசன் உட்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தது மன நிறைவை தந்தது.  அதே போல் இரண்டு நேசனல் ரெக்கார்ட் செய்துள்ளேன். கடந்த 2018-ல் ஜம்மு, காஷ்மீரில் நடைபெற்ற  கிரிக்கெட் போட்டியில் 64 பந்துகளுக்கு 115 ரன் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனா நின்றது இந்திய அளவில் பாராட்டு கிடைத்தது.



அதே போல் 2019-ல் அசாமில் நடைபெற்ற போட்டியில் 16 பந்துகளுக்கு 50 ரன்கள் குவித்தேன். இதனால் (fastest fifty)- பாஸ்ட்டஸ் ஃபிப்ட்டி என்ற இலக்கை அடைந்தேன். பயிற்சியாளர் இல்லாமல் தன்னிச்சையாக பயிற்சி பெற்று வளர்ந்துள்ளேன். அப்போதெல்லாம் சச்சின் டெண்டுல்கர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவருடை வீடியோக்கள்தான் பயிற்சியை அளித்தது. அதன் பின்னர் என்னை பலரும் சச்சின் சிவா என்று அழைக்க ஆரம்பித்தார்கள். தற்போது தமிழ்நாடு அளவில் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியின் கேப்டனாக உள்ளேன்.



 

இந்நிலையில் பங்களாதேசத்தில் நடைபெற உள்ள மாற்றுத்திறனாளி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்நாட்டில் தேசிய தலைவராக பார்க்கப்படும் ’பங்கோ பன்’ - நினைவை போற்றும் வகையில் நடைபெறும் போட்டியில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது. பங்களாதேஷ், இலங்கை, இந்தியா, நேப்பால் ஆகிய நான்கு நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் தேனியைச் சேர்ந்த சிவாவும் நானும் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளோம். கண்டிப்பாக வெற்றியை தட்டுவோம். என்னுடைய சூழலை உணர்ந்து மாவட்ட ஆட்சியர் பணம் வழங்கியுள்ளார், அது ஆறுதலை தருகிறது. எனினும் எங்களுக்கு கூடுதல் நிதியுதவி செய்தால் எங்கள் பயண செலவை பூர்த்தி செய்து கொள்வோம்” என்றார்.