கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் 77 ஏக்கர் பரப்பளவில் 22 கோடி செலவில் நறுமணப்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடந்து நடந்து வந்தன. மிளகாய் அதிகம் விளையும் சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் இப்பூங்கா அமைவதால் விவாசாயிகள், தனியார் நிறுவனங்கள், விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் என பலரும் பயனடையக் கூடும் என கூறப்பட்டது. மேலும் இஞ்சி, ஏலம், சுக்கு, மல்லி, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்ட பொருட்களை மதிப்பு கூட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை இந்த நறுமணப்பூங்கா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. 



 

நறுமணப்பூங்காவிற்காகன்கட்டுமான பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. நறுமணப்பூங்கா திறக்கப்பட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2500 நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் சிவகங்கை மாவட்டம் அச்சானி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். 



 

அதில், "சிவகங்கை நறுமண பூங்கா முழு உள்கட்டமைப்பு வசதிகளுடன் 2013 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஊரக நகரமைப்பு துறையின் அனுமதி கிடைக்காத காரணத்தால் 8 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ஆனால், கட்டமைப்பு வசதிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையிலும் இதுவரை சிவகங்கை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நறுமணப் பூங்கா பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த நறுமணப் பூங்கா மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவும் உதவியாக அமையும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு சிவகங்கையில் கட்டப்பட்டுள்ள நறுமண பூங்காவை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொணர உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.




 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.