தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன் பட்டி எனும் கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன். இவர் அப்பகுதியில் விவசாய கூலியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் அருண் பாண்டியன் வயது (29) இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சிவப்பிரியா வயது (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை இருந்தது. தனது பெற்றோருடன் அருண்பாண்டியன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். மாமனாரான பெரியகருப்பனுக்கும், சிவப்ரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பெரியகருப்பன் தனது மகன் காதல் திருமணம் செய்து வந்ததற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததும், தனது மகன் எந்தவித வரதட்சனை இன்றி சிவப்ரியாவை திருமணம் செய்து விட்டதாக கூறி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வரதட்சனை கேட்டு பெரியகருப்பன் சிவப்பிரியா உடன் தகராறில் ஈடுபட்டுள்ளார் . அப்போது வீட்டில் இருந்த அருண்பாண்டியன் தந்தையையும் தனது மனைவியையும் சமாதானம் செய்தார். பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள உணவு விடுதியில் உணவு வாங்குவதற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது பெரியகருப்பன் சிவப்ரியாவுடன் மீண்டும் தகராறு செய்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பெரியகருப்பன் வீட்டில் தோட்டத்தில் பூச்சி மருந்து இயந்திரத்தை இயக்குவதற்கு கேனில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து மருமகள் மீது ஊற்றியுள்ளார். இதுமட்டுமின்றி கோபத்தில் அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது பேரன் யாகித் மீதும் அவர் பெட்ரோலை ஊற்றியுள்ளார். மருமகள் , குழந்தை என்றும் பாராமல் தீவைத்து கொளுத்தியுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் சிவப்பிரியா குழந்தை ஆகியோர் மீது தீப்பற்றி எரிந்து உள்ளது. வேதனை தாங்க முடியாமல் இரண்டு பேரும் அலரி உள்ளனர். தீ வைத்து விட்டு பெரியகருப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையில் சிவப்பிரியா மற்றும் அவருடைய குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அவர்கள் மீது எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த அருண்பாண்டியன் தனது மனைவியையும் மகளையும் பார்த்து கதறியுள்ளார். உடல் கருகி தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய சிவப்பிரியா குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் கொண்டு செல்லும் வழியில் யாகித் பரிதாபமாக உயிர் இழந்தார். சிவப்பிரியா மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியில் பதுங்கி இருந்த பெரியகருப்பனை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவப்ரியாவுடம் போலீசார் கொடுத்த வாக்குமூலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தன்னிடம் வரதட்சணை கேட்டு மாமனார், மாமியார் ,கணவர் அருண்பாண்டியன் அவரது சகோதரி கனிமொழி ஆகியோர் தொடர்ந்து தன்னை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து அருள் பாண்டியன் உட்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சனைக்காக சிறு குழந்தை என்று பாராமல் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Perarivalan Case Updates LIVE : எங்களின் 31 ஆண்டுகால போராட்டத்தை நீங்கள் அறிவீர்கள் - அற்புதம்மாள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்