உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த தந்தையின் உடல் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையிலும், பிளஸ்-2 மாணவி நேற்று தேர்வு எழுதிவிட்டு வந்து தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த உருக்கமான நிகழ்வு பரமக்குடியில் நடந்துள்ளது.
உடல்நலக்குறைவால் மரணம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜப்பட்டினத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி பவானி. இவர்களது ஒரே மகள் சுரேகா(வயது 17). இவர் பரமக்குடியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவி சுரேகாவின் தந்தை ரவிச்சந்திரன் சலூன் கடை வைத்து தொழில் நடத்தி வந்தார்.
கடந்த ஒரு மாதமாக அவர் உடல்நலக்குறைவால் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இறந்துவிட்டார். இதனால் அவரது மனைவியும், மகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது உடலை பெற்று கொண்ட குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்வதற்காக நேற்று வீட்டில் வைத்தனர்.
உறவினர்கள் அஞ்சலி
மாணவி சுரேகாவும், அவரது தாயாரும் ரவிச்சந்திரன் உடல் அருகே அழுது கொண்டிருந்தார்கள்.ஒருபுறம் தந்தை இறந்த துக்கம், இன்னொரு புறம் நேற்றைய வணிகவியல் தேர்வு. என்ன செய்வது என தெரியாமல் மாணவி சுரேகா தவித்தார். சுரேகாவிடம் அவருடைய தாயார் பவானி, “நடந்தது நடந்து விட்டது. அப்பா இறந்து விட்டார். அவர் ஆசைப்படி நீ படித்து பெரிய ஆளாக வர வேண்டும். அப்பா சொன்னது போல் அரசு வேலை பார்க்க வேண்டும். நீ கட்டாயம் இன்று (அதாவது நேற்று) தேர்வை எழுத வேண்டும்” என்று தைரியம் சொல்லியிருக்கிறார்.
தந்தையின் ஆசையை நிறைவேற்ற தன் மனதை திடப்படுத்தி கொண்ட சுரேகா நேற்று பிளஸ்-2 தேர்வு எழுத பள்ளிக்கு சென்றார். முன்னதாக மாணவி சுரேகா தேர்வு எழுத வரமாட்டார் என சகமாணவிகள், ஆசிரியர்கள் நினைத்து இருந்த நிலையில், திடீரென்று அங்கு வந்த மாணவி சுரேகா அங்கு வந்தார். உடனே அவரைப் பார்த்த சக தோழிகள் மற்றும் ஆசிரியைகள் அவரது கையை பிடித்து அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.
அதன் பின்னர் மாணவி சுரேகா வணிகவியல் தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பினார். மாணவி வீடு திரும்பும் வரை காத்திருந்த உறவினர்கள் அதன் பிறகு இறுதி சடங்கு நடத்தினர். தந்தை உடலுக்கு இறுதிச்சடங்கு செய்துவிட்டு, மாணவி கதறி அழுதது அங்கிருந்த உறவினர்களின் கண்களை குளமாக்கியது.