உலகமே கொரோனா முதலாம் அலை தொடங்கி மூன்றாம் அலை என உயிருக்கு அஞ்சியும், கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றியும் தவித்துவர கூடிய சூழல் நிலவுகிறது. பல இடங்களில் தொழிலும், வியாபாரமும் மந்தமான நிலைக்கு சென்றுவிட்டது. இதனை மீட்கும் முயற்சியாக பலரும் வித்தியாசமான யோசனைகள் கையில் எடுத்து வியாபாரத்திற்கு சூடு வைத்துள்ளனர். இதில் மதுரை மற்றும் சுற்று வட்டார வியாபாரிகள் வேற ரகம் என்று சொல்லும் அளவிற்கு வித்தியாசத்தை காட்டுகின்றனர்.




 

செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி, 1 கிலோ மீன் வாங்கினால் பெட்ரோல் இலவசம், ஒரு கிலோ கறி வாங்கினால் எண்ணெய், பலசரக்கு ஜாமான் இலவசம் என கவர்சிகர விளம்பரங்களை அள்ளித் தெளிக்கின்றனர். இந்நிலையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் மூன்று பிரிவு பிரியாணி இலவச ஆஃபர்களை தெளித்துள்ளார் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர்.



கறி வாங்கினால் பெட்ரோல் இலவசம் குறித்த செய்தி படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ஒரு கிலோ கோழிக்கறி வாங்கினால்... ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்: ‛ஆடி ஆஃபர்’ அறிவித்த கசாப்புக்கடைக்காரர்!

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகம் ஒன்றில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு சலுகையாக  தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை சட்டை மட்டும் அணிந்து வந்தால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்றும். அதே போல் வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி அணிந்து வந்தால் இரண்டு சிக்கன்  பிரியாணி இலவசம் எனவும், இதற்கு ஒருபடி மேலாக தி.மு.க கரை வேட்டி அணிந்து வந்தால் மூன்று சிக்கன் பிரியாணி இலவசம் என்ற 'சிறப்பு' திறப்பு விழா சலுகையை அறிவித்து இருந்தனர்.



இந்த அறிவிப்பை அடுத்து கடை முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூகம் இடைவெளியை பின்பற்ற   இரண்டு நாட்களுக்கு முன்பே கடை முன்பு  தடுப்பு அமைக்கப்பட்டன. இதனால் பிரியாணி பிரியர்கள் இலவசமாக பிரியாணியை வாங்க கடையின் முன்பு கூடினார்கள். திறப்பு விழா காணப்பட்ட சில நிமிடங்களிலேயே இலவச பிரியாணி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பிரியாணியும் வாங்க சிறுவர் முதல் பெரியவர்கள் என அனைவரும் கடையின் முன்பு  முண்டியடித்துக் கூடினர்.



பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் உணவக நிர்வாகம் வரிசையில் நின்ற அனைவருக்கும் இலவச சிக்கன் பிரியாணியை வழங்கினார்கள். உணவகம் கூறியதைப் போல் தி.மு.க கரை வேட்டி அணிந்து வந்தால் மூன்று சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டன. திறப்பு விழா சலுகை என வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி அணிந்து வந்தால் இலவச பிரியாணி என வித்தியாசமான சலுகை அறிவிப்பால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபருக்கு இலவச பிரயாணிகள் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.