கோலாகலமாக நடைபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்., அரோகரா கோசம் விண்ணை பிளக்க திரளான பக்தர்கள் பங்கேற்பு


கொடியேற்றம்


அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு 15 நாள் நடைபெறும் திருவிழாவாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பங்குனித் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 8.45 மணி முதல் 9.30 மணிக்குள் திருப்பரங்குன்றம் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் உள்ள கொடி மரத்தில் பங்குனி திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சிம்மாசனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் எழுந்தருளி உற்சவர் சன்னதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க கம்பத்தடி மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், தயிர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 


 


வீதி உலா


தொடர்ந்து., வேத விற்பனர்கள் பூஜிக்கப்பட்ட நீரை கொடி மரத்திற்கு ஊற்றி அபிஷேகம் செய்த பிறகு கொடி மரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, அங்க வஸ்திரம் சாத்தப்பட்டு, தர்ப்பைப்புல், மாயிலை வைத்து கட்டப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காலை-மாலை இரு வேலைகளிலும் முருகப்பெருமான் தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தினமும் காலையில் தங்க பல்லாக்கிலும், மாலை வேளையில் தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்னமையில் வாகனம், சேஷ வாகனம், வெள்ளி யானை வாகனம், தங்கமயில் வாகனம், இடப வாகனம், வெள்ளி ஆட்டுக்கிடாய் வாகனம், பச்சை குதிரை வாகனம், தங்கமயில் வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  அதனைத் தொடர்ந்து, 24 ஆம் தேதி பங்குனி உத்திரமும், 26-ஆம் தேதி சூரசம்ஹார லீலையும், 27-ஆம் தேதி முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகமும், 28-ஆம் தேதி முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணமும், 29-ஆம் வெள்ளிக்கிழமை திருத்தேரோட்டமும், 30ஆம் தேதி தீர்த்த உற்சவமும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பங்குனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.


இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிவகங்கை மாவட்டத்தில் சாலை பணிக்கான டெண்டர் ரத்து; வழக்கை முடித்து வைத்த நீதிமன்றம்


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Electoral Bonds: தேர்தல் பத்திர எண்களை வெளியிட எஸ்பிஐ-க்கு உத்தரவு; மீண்டும் உச்சநீதிமன்றம் அதிரடி