கீழடியில் கடந்த  2014 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வு பணி தொடங்கி 2 மற்றும் 3 கட்ட அகழாய்வு என மூன்று கட்டங்களை மத்திய தொல்லியல்துறையும், அதனைதொடர்ந்து நடைபெற்ற 4, 5, 6, 7 உள்ளிட்ட  அகழாய்வு பணிகளை தமிழ்நாடு தொல்லியல்துறையும் மேற்கொண்டனர். கீழடி, பகுதிகளில் நடைபெற்று வந்த 7 ஆம் கட்ட அகழாய்வு பணியானது கடந்த செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. நடைபெற்று முடிந்த அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டது.



 

கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கீழடியில் 8-ம்கட்ட அகழாய்வுப் பணி தொடங்கப்படும் என கடந்த மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்து கீழடியில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை நடக்கும் என தெரிவிக்கப்படடிருந்தது. இந்நிலையில் கீழடி 8-ம் கட்ட அகழாய்வுப் பணியை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்  சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் கடந்த 11 ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது கீழடியில் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.




 






இந்நிலையில் நேற்று ஒரு குழியில் 2 அடி தோண்டிய நிலையில் 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. அதில் 2 பச்சை நிறத்திலும் 2 ஊதா நிறத்திலும் இருந்தன. மேலும் யானை தந்தத்தால் ஆன கன செவ்வக வடிவ பகடை கண்டெடுக்கப்பட்டது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக தனது முகநூலில் பதிவிடுள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கீழடி அகழாய்வில் இது வரை கனச்சதுர வடிவ பகடைக்காய்கள் மட்டுமே கிடைத்த நிலையில் முதல்முறையாக கனச்செவ்வக வடிவ படைக்காய் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

 

 

 


 

’வால் அளவு மட்டும் தான் கீழடியில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் ஆயிரம், ஆயிரம் பொக்கிஷம் கிடைத்துள்ளது. கீழடியை தொடர்ந்து அகழாய்வு செய்யும் போதும் இன்னும் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் நமக்கு கிடைக்கப்பெரும் என எழுத்தாளர் சு.வெங்கடேசன் குறிப்பிடுகிறார். இந்நிலையில் கீழடி 8-ம் கட்டம் வரை தொடர்ந்து வருகிறது. இந்த முறை இன்னும் பல்வேறு பழமையான பொருட்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.