2 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா செய்கிறேன் என பாஜக வேட்பாளர் வாக்குறுதி கொடுத்துள்ளார். 


நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் களத்தில் இறுதியாக 12 ஆயிரத்தி 607 பதவியிடங்களுக்கு  57 ஆயிரத்தி 778 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளார்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.






நாளை முழுதும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் ஓய்வு. ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணிகள் மட்டும் நாளை நடக்கும் நாளை மறுநாள் ஓட்டுப் பதிவு நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.  இந்நிலையில்  சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க., வேட்பாளர் ஒருவர் “2 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா” செய்து விடுகிறேன் எனக்கூறி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.



சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 5 - வது வார்டில்  பா.ஜ.க வேட்பாளர் சதீஸ் போட்டியிடுகிறார். இவர் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளான ராணி அம்மையார் தெரு, கோகாலேஹால் தெரு, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் தனது வார்டில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தேர்தல் வாக்குறுதிகள் அளித்து வரும் நிலையில் அதனை 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி தருவதாகவும், அதனை நிறைவுற்றமுடியாத பட்சத்தில் தானே ராஜினாமா செய்து கொள்ளவதாக தெரிவித்ததுடன் அதனை துண்டுபிரசுரங்களில் அச்சிட்டும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். பா.ஜ.க வேட்பாளரின் இந்த அதிரடியான முடிவு அப்பகுதி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

“நான் உங்களுக்கு சொன்ன வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவேன். குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, செப்டிக் டேங் கிளீன் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து முடிப்பேன். என்னை நம்பி ஓட்டு போடுங்கள். தேவையான வசதிகளை செய்து தருகிறேன்” என வேட்பாளர் சதீஸ் கடைசிக் கட்ட பிரச்சாரம் செய்கிறார்.