தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டமாக பார்க்கப்படும் சிவகங்கை பகுதியில், அங்குள்ள  ஊராட்சி ஒன்று முன்மாதிரியான ஊராட்சியாக மாறியுள்ளது. பல்வேறு கட்டமைப்பு வசதிகளை பெற்றதால், இந்த ஊராட்சிக்கு மத்திய அரசின் சமூக பாதுகாப்புடைய ஊராட்சி என்ற விருது கிடைத்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.




சிவகங்கை அடுத்த அரசனூர் ஊராட்சியின் தலைவராக செல்வராணி ஐயப்பன் உள்ளார்.  பெண் ஊராட்சி மன்ற தலைவரான இவர் ஊராட்சியின் பொது மக்கள், அதிகாரிகள் ஒத்துழைப்போடு ஊராட்சியை தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்றி சாதித்துள்ளார். இதற்காக மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.






சிவகங்கை ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசனூர் ஊராட்சியில் செம்பூர், அரசனூர், திருமாஞ்சோலை, உள்ளிட்ட 9 வருவாய் கிராமங்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் அதிமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த  ஊராட்சியின் முதல் பெண் தலைவராக செல்வராணி (33 - வயது) உள்ளார். எம்.எஸ்.சி., பி.எட். பட்டதாரியான இவர் நான்கு வருடத்தில் ஊராட்சியை ரோடு வசதி, தெருவிளக்கு, குடி தண்ணீர், நீர்நிலை மேம்பாடு, மரம் வளர்த்தல், கண்மாய் தூர்வாருதல், பெண் பாதுகாப்பு விழிப்புணர்வு, சூமூக பேச்சுவார்த்தை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட அனைத்திலும் தன்னிறைவு பெற்ற பகுதியாக மாற்றி உள்ளார். இதனால் இந்த ஊராட்சிக்கு மத்திய அரசின் சமூக பாதுகாப்புடைய ஊராட்சி என்ற விருது கிடைத்துள்ளது.




இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவி செல்வராணி நம்மிடம், “எங்களுடைய கிராமம் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமமாகத்தான் இருந்தது. தற்போது சாலை வசதி, தண்ணீர் வசதி, கழிவு நீர் வாய்க்கால் அமைப்பது என ஏகப்பட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். இந்த முயற்சியால்  தன்னிறைவு பெற்றதாக மாறிய எங்கள் ஊராட்சி தமிழ்நாட்டில் முதல் ஊராட்சியாகவும், இந்திய அளவில் 4- வது ஊராட்சியாகவும் தேர்வு செய்து சமூக பாதுகாப்புடைய ஊராட்சி என பட்டம் கொடுத்து மத்திய அரசு கவுரவித்துள்ளது. இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.


நான் ஒரு பெண் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதால் பெண்கள் பிரச்னை, முதியவர்களின் பிரச்னை, குழந்தைகள் பிரச்னையை கூட எளிமையாக அணுக முடிகிறது.




அதேபோல் விவசாய தேவைக்காக தண்ணீர் கிடைக்க குளம், கண்மாய், வரத்துக் கால்வாய் என அனைத்தையும் தூர்வாரினோம். இதனால் விவசாயம் பெருகியது. அதோடு நிற்காமல் கிராமத்திலேயே விளைவித்த விவசாய உற்பத்தி பொருட்களை சந்தை படுத்துதளையும் செய்து விவசாயிகளை வியாபாரிகளாக மாற்றினோம். இதனால் மில் வேலைக்கு சென்ற பலரும் விவசாய பணிக்கு திரும்பி, வருவாய் ஈட்டி வருகின்றனர். இதனால் கிராமத்தில் தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்பட்டது. தீண்டாமை இல்லாமல் எல்லோரும் சமத்துவமாக பழகும் நிலை ஏற்பட்டது. இப்படி கிராமத்தில் மூலை முடுக்கெல்லாம் பணி செய்தேன். இதனால் கிராமம் செழிப்பானது. அங்கன்வாடி முதல் தொடக்க பள்ளிக் கல்வி வரை திறம்பட அமைத்துக் கொடுத்தோம் இதனால் மாணவர்கள் நன்கு படித்து வருகின்றனர். இப்படி பல்வேறு பணிகளை செய்த நாங்கள் விருதிற்காக பதிவு செய்தோம். சமூக பாதுகாப்பிற்கான கிராமமாக மாறிய எங்கள் ஊராட்சியை அரசும் தேர்வு செய்து அங்கீகரித்துள்ளது” என்றார்.




மேலும் கிராம மக்கள் கூறுகையில், “சிவகங்கை மாவட்டத்தில் வருவாய் அதிகம் உள்ள ஊராட்சியாக அரசனூர் மாறியுள்ளது. எங்கள் ஊராட்சியில்  4 நூற்பாலைகள், சிமிண்ட் பேவர் பிளாக் கம்பெனி என தொழில் வளம் நிறைந்துள்ளதால் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதே போல் யுனிவர்சிட்டி பொறியியல் கல்லூரிகள், சட்ட கல்லூரி ஆசிரியர் பயிற்சி கல்லூரி போன்றவை இருப்பதால் ஊராட்சிக்கு வரி வருவாய் அதிகம் கிடைக்கிறது.




நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டதால் விவசாய பணிகளில் ஆர்வம் காட்டுவதோடு விளைந்த பொருளை விற்பனை செய்ய எங்கள் ஊராட்சியிலே தினசரி சந்தை கட்டிடங்கள் கட்டப்பட்டு பல்வேறு பகுதியிலிருந்து காய்கறி வாங்கிச் செல்வதும் இந்த ஊராட்சிக்கு கூடுதல் சிறப்பாக உள்ளது. எங்கள் ஊராட்சி இப்படி ஒரு விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றனர்.