மதுபான கடையால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை எனவும், பெண்கள், மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த தும்மக்குண்டு பஞ்சாயத்துக்கு உட்பட்டது T.கரிசல்பட்டி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தின் 400 மீட்டர் அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு உள்ளது. T.கரிசல்பட்டியிலிருந்து  தும்மக்குண்டில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் இந்த மதுபானக் கடையைத் கடந்துதான் செல்ல வேண்டும்.



 

மேலும்  பெண்கள் தனியாக செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் சம்மந்தப்பட்ட மதுபானக் கடையை அகற்றக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மதுபான கடையை அகற்ற கோரி  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



மதுபானக்கடை திறப்பால் பள்ளி மாணவிகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பவில்லை எனவும், பெண்கள் சென்றுவரும்போது மதுகுடித்துவிட்டு குடிமகன்கள் அவதூறாக பேசுவதாகவும், மாணவிகளை கேலி செய்வதாகவும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பெண்கள் தங்களது வேதனையை  தெரிவித்தனர்.

 





 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர