100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் பல வார்டுகளில் தீர்க்கப்படதாக அடிப்படை பிரச்னைகள் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. இதனால் மதுரை மேயர் தலைமையிலான கவுன்சிலர் கூட்டங்கள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. தி.மு.க. மேயருக்கு எதிராகவே தி.மு.க. கவுன்சிலர்கள் கொடிபிடித்து வருகின்றனர். இதனால் மதுரை மாநகராட்சியில் அவ்வப்போது பூகம்பம் வெடித்து வருகிறது.

 

பாதாள சாக்கடை அடைப்புத் தெரு:

 

இந்நிலையில்  பாதாள சாக்கடை அடைப்புத் தெரு என்ற பெயரில் மதுரையில் புதிதாக உருவாகிய தெருவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியை கண்டித்து நூதன முறையில் பெயர் பலகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது சூட்டை கிளப்பியுள்ளது.



மதுரை மாநகராட்சி 23 மற்றும் 24ஆவது சந்திப்பு பகுதியான இந்திரா நகர் பகுதியில் பல மாதங்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடுகிறது. இது குறித்து பலமுறை புகார் மனு அளித்தும் மதுரை மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துர்நாற்றத்துடன் வாழும் நிலையோடு இருந்து வருகின்றனர்.  மேலும் தெருக்களில் கழிவுநீர் செல்வதால் புழுக்கள் மற்றும் கொசுத்தொல்லை இருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.



 

இந்நிலையில் மதுரை மாநகராட்சியை கண்டித்தும், கழிவுநீர் தெருக்களில் ஓடுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரியும் அப்பகுதி பொதுமக்கள் இந்திரா நகர் என்ற தெருவின் பெயரை மாற்றி பாதாள சாக்கடை அடைப்பு தெரு என்று புதிய பெயர் பலகை திறந்து வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திராநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



 

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதிக்கு மக்களாக சேர்ந்து பாதாளசாக்கடை அடைப்பு தெரு என மாற்றி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.