மதுரை மாநகராட்சி  67-வது   வார்டுக்கு உட்பட்ட பகுதியில் எச்.எம்.எஸ்.,  காலனி உள்ளது. அங்குள்ள இராமலிங்க நகர் பகுதியில் அதிகளவு பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் பழமையான மரமானது நீண்ட நாட்களாக குடியிருப்புகளையும், மின்சார வயர்களையும், மின் கம்பிகளையும்  சூழ்ந்துள்ளதாகவும், மரம் எந்த நேரத்திலும்  சாய்ந்து விழலாம் என்ற ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 





 



 

அதே போல் மழை காலம் என்பதால், பயங்கரமான ஆபத்தை ஏற்படுத்தலாம் என பொதுமக்கள் கருதுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மக்கள் நலன் கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட மரக்கிளைகளை அகற்றி விட்டு பொது மக்கள் உயிரையும் உடைமைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து "Abp nadu" புகார் பெட்டிக்கு புகார் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டோம்.

 



இது குறித்து புகார்தாரர் ரமணி நம்மிடம்...," ராமலிங்கம் நகர்பகுதியில் உள்ள பழமையான மரம் மின்கம்பத்தையும், குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ளது. இதன் கிளைகளை மட்டுமாவது வெட்ட வேண்டும் என பலமுறை புகார் அளித்துவிட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ஆபத்து நிகழ்ந்த பின் செயல்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செயல்பட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.



 

இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடமும், அப்பகுதி வார்டு கவுன்சிலரிடமும் புகார் குறித்து தெரிவித்தோம். விரைவில் மரக்கிளைகளை அகற்ற முயற்சி எடுப்பதாக தெரிவித்தனர்.