சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பாக நகர் மன்ற தலைவர் ஒப்புதல் அடிப்படையில் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தில் பல்வேறு விசயங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் சிவகங்கை நகர் மன்ற சேர்மன்கள் மற்றும் தற்போதைய சேர்மன் பெயரும் வார்டுகளில் உள்ள தெருக்களுக்கு வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த தீர்மானம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த பிரச்னை தொடர்பாக Abp நாடு செய்தித் தளத்தில் Sivagangai: தெருக்களுக்கு தனது பெயர் வைக்க திமுக சேர்மன் தீர்மானம் நிறைவேற்றம் - கொதிக்கும் சிவகங்கை மக்கள்   என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். இந்நிலையில் சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் முன்னாள் மற்றும் தற்போதை நகராட்சி தலைவரின்  பெயர்களை வைக்க நகராட்சி கூட்டத்தில் கடந்த ஜூன் 30ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்  பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.




 

சிவகங்கை சேர்ந்த மணி மாறன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில்  தாக்கல் செய்த மனு. அதில், "நான் சிவகங்கை நகராட்சியில் வசித்து வருகிறேன்.  சிவகங்கை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி  சிவகங்கை நகராட்சி கூட்டத்தில் 43வது  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவகங்கை 8வது வார்டில் ஏற்கனவே உள்ள தெருவின் பெயர் சாஸ்திரி தெரு என்று உள்ளது.  முன்னாள் பிரதமர் சாஸ்திரி என்ற பெயரை மாற்றி,   சிவகங்கை நகராட்சி  முன்னாள் சேர்மன் நாகராஜான் என்று பெயர் வைக்க வேண்டும் எனவும், இதேபோல் 10வது வார்டில் உள்ள நெல்மண்டி தெருவுக்கு, முன்னாள் சேர்மன் முருகன் என்று பெயர் வைக்க வேண்டும் எனவும், தற்போதைய நகராட்சி தலைவர்  துரை ஆனந்த் பெயரையும் தெருக்களுக்கு வைக்க  தீர்மானம்  நிறைவேற்றி உள்ளனர். இந்த தீர்மானம் சட்டத்திற்கு விரோதமானது.   இந்த முன்னாள் நகராட்சி தலைவர்கள் மீது  பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் முன்னாள் பிரதமர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்கள் தான் தெருக்களுக்கு வைப்பது வழக்கம். இவர்கள் சுய லாபத்திற்காக, தலைவர்களின் பெயரை அகற்றிவிட்டு   தங்கள் பெயரை வைக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். எனவே, இந்த தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.



 

இந்த பொது நல மனு  நீதிபதிகள்  S.S.சுந்தர்,   பரத சக்கரவர்த்தி  அமர்வு முன்பு விசாரணைக்கு  வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், சிவகங்கை நகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண