சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பாக நகர் மன்ற தலைவர் ஒப்புதல் அடிப்படையில் சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்தில் பல்வேறு விசயங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் சிவகங்கை நகர் மன்ற சேர்மன்கள் மற்றும் தற்போதைய சேர்மன் பெயரும் வார்டுகளில் உள்ள தெருக்களுக்கு வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் நம்மிடம் பேசுகையில்," சிவகங்கையில் பல்வேறு அடிப்படை பிரச்னைகள் உள்ளது. இந்த நிலையில் சிவகங்கை நகராட்சியின் சேர்மனாக உள்ள துரை ஆனந்த் அதிகார போக்கில் தனது பெயரை தெருக்களுக்கு வைக்க வேண்டும் என  சுயநலமாக சிந்திக்கிறார். இந்த நோக்கம் வெளியே தெரியாமல் இருக்க முன்னாள் சேர்மன்கள் பெயர்களையும் தெருக்களுக்கு வைக்கப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இது முழுக்க முழுக்க தற்பெருமையை தூக்கி வைக்க நடக்கும் செயல். இதனை தி.மு.க., தலைமை கண்டித்து உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் துரை ஆனந்த் அவர்களின் இது போன்ற செயல்பாடுகள் அதிகரிக்கும். பெயர் வைக்கப்பட உள்ள ஒரு சில முன்னாள் சேர்மன்களின் மீது ஊழல் புகார் உள்ளது. தற்போது உள்ள  துரை ஆனந்த் மீதும்  பல குற்றச்சாட்டுகள் உள்ளது. இந்த சூழலில் இப்படி தெருவிற்கு அவரின் பெயர் வைப்பது அதிகார போக்கு. எனவே தெருக்களுக்கு தேசத்திற்காக பாடுபட்ட நபர்களின் பெயரை மட்டுமே வைக்க வேண்டும்" என்றனர்.





மேலும் இதுகுறித்து அ.தி.மு.க., நகரச் செயலாளர் என்.எம்.ராஜாவிடம் பேசினோம், "சேர்மன்கள் பெயர் சூட்டுவது குறித்து நகர் மன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்கள் பெயரைக் கூட தவிர்த்துவிட்டு சேர்மன் தனது பெயரை வைக்க முயற்சிக்கிறார். எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் நீதிமன்றம் நாடுவோம்" என்றார்.





சிவகங்கை தி.மு.க.,நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் அவர்களிடம் பேசியபோது..," ஒரு தலைபட்சமாக செய்யவில்லை. ஏற்கனவே இருந்த அனைத்து சேர்மன்கள் பெயரை தான் வைக்கிறோம். அதில் அதிமுக, திமுக, காங்கிரஸ் என எல்லா சேர்மன்களின் பெயரும் என்னுடைய பெயரையும் தெருக்களுக்கு வைக்க உள்ளதாக தான் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இதனை பொதுமக்கள் வரவேற்கின்றனர். " என தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.