” உசிலம்பட்டி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து திசை திருப்பி கடையில் இருந்த 9 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற பெண் - சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளவர் செல்வி., இவர் விக்கிரமங்கலம் கனரா வங்கி அருகில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார்., இந்நிலையில் குடும்ப தேவைக்காக கடை அருகே உள்ள கனரா வங்கியில் தனது நகைகளை அடகு வைத்துவிட்டு அதன் மூலம் கிடைத்த 9 லட்சம் ரூபாயை கடையில் வைத்திருந்தாக கூறப்படுகிறது.

 





 

இதை கண்காணித்து இருசக்கர வாகனத்தில் வந்த பெண் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து செல்வியை திசை திருப்பி கடையில் இருந்த 9 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

இந்த சம்பவம் குறித்து செல்வி அளித்த புகாரின் அடிப்படையில்,  விக்கிரமங்கலம் காவல் நிலைய போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கடைக்கு வந்த மர்ம பெண், கடைக்குள் அமைதியாக வருகை தந்த காட்சியும், பணத்தை எடுத்துக் கொண்டு வேகமாக இருசக்கர வாகனத்தில் பறந்து சென்ற காட்சியும் பதிவாகி உள்ளது., இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 9 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.



 

இது குறித்து காவல்துறையினர்..,” பாதிக்கப்பட்ட பெண் செல்வி வங்கியில் பணம் பெற்றதை அறிந்த அந்த பெண் தொடர்ந்து கண்காணித்துள்ளார். எப்படியாவது அவரிடம் இருக்கும் பணத்தை திருட வேண்டும் எண்ணத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் செல்வியின் கடைக்கு வந்த அந்த பெண் கடையில் பொருட்கள் வாங்குவது போல் நடித்து அவர் வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றார். கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அப்பகுதியில் உள்ள  சிசிடிவிகளின் அடிப்படையில் விசாரணை செய்து வருகிறோம். விரைவில் பணத்தை திருடிய பெண்ணை கைது செய்து விசாரணை நடத்துவோம் என நம்பிக்கை தெரிவித்தனர்.