வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரையில் இரவில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்காக மழைநீர் ஓடியது.

 

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவரூர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:


மேலும், குமரிக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


அதேபோல் வரும் 27 ஆம் தேதி வரை  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் இரவில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்துசென்றது. இரவில் தொடர்ந்து லேசான மழையும் இருந்ததால் மதுரை ஜில்லென மாறியுள்ளது.





கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகின்றது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை நாளை முதல் தமிழகத்தில் தொடங்கவுள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. 






மதுரையில் கொட்டித் தீர்த்த மழை:


அதன்படி மதுரை மாநகருக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில்வே நிலையம், ஆரப்பாளையம், ஜெய்ஹிந்த்புரம், சிம்மக்கல், தல்லாகுளம், அண்ணாநகர், நரிமேடு, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், அனுப்பானடி, தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 2 மணி நேரத்திற்கு மேலாக  கன மழை பெய்தது . இதன் காரணமாக ஆங்காங்கே முக்கிய  சாலைகளில் மழைநீர் தேங்கியதால் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  மாநகரின் சில  தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்ததால் வாகனங்கள் ஊர்ந்துசென்றது.


அரபிக்கடல் பகுதிகள்: 


22.10.2023 முதல் 24.10.2023: தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு மணிக்கு 110 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


25.10.2023: மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.