குரும்பை, சின்னகருப்பு, வெள்ளைமறை, கண் செவலை, சீனு குரும்பை, பால்டப்பா பருமறை என பல்வேறு வகையான 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் கொண்டு வரப்பட்டு மோத விடப்பட்டது.

 


 

பாரம்பரிய  விளையாட்டுப் போட்டி

 

தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டியைப் போல் சேவல் சண்டை, மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டுப் போட்டி, கிடாய் முட்டு சண்டை உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தப்படும். குறிப்பாக பொங்கல் தினத்தையொட்டியும் கிராம திருவிழாக்களைத் தொடர்ந்தும் இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி பெற்றனர். இதனை ஏராளமான பாரம்பரிய விளையாட்டு ஆர்வலர்களும் கிராம மக்களும் கண்டு ரசித்தனர்.
 


மாபெரும் கிடா முட்டு போட்டி

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் அங்காள பரமேஸ்வரி கோயில் முன்பு கிராம மக்கள் சார்பில் மாபெரும் கிடா முட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவோடு கிடா முட்டு போட்டி இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து குரும்பை, சின்னகருப்பு, வெள்ளைமறை, கண் செவலை, சீனு குரும்பை, பால்டப்பா பருமறை என பல்வேறு வகையான 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் கொண்டு வரப்பட்டு மோத விடப்பட்டது.

 

கிடாய்கள் முட்டுகள் அடிப்படையில் வெற்றி

 

10 முதல் 70 முட்டு வரை எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டு அதிகப்படியான எண்ணிக்கையில் மோதிக் கொள்ளும் கிடாக்களை வெற்றி பெற்றதாக அறிவித்தது பித்தளை அண்டா பரிசாக வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கு பெரும்  கிடாக்களுக்கு சில்வர் அண்டா மற்றும் மரக்கன்றுகள் கிராம கமிட்டியினரால் பரிசாக வழங்கப்பட்டது. இந்த போட்டியை உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு கழித்தனர்.

 

கிடாய் முட்டில் பழைய நினைவு

 

கிடாய் முட்டு போட்டிக்கு வந்திருத்த செந்தில்நாதன் என்பவர் நம்மிடம் பேசுகையில்...,” எனக்கு சொந்த ஊர் திருமங்கலம் தான். கிடாய் முட்டு போட்டியை காண இவ்வளவு தூரம் பயணித்து வந்தேன். கடந்த 20 வருடத்திற்கு மேல் நான் மலேசியாவில் இருந்தேன். கிடாய் முட்டு சண்டை பார்க்கை எனக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இந்நிலையில் ஊரில் இருந்து வந்த எனக்கு பலவருடம் கழித்து கிடாய் முட்டு சண்டை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து வந்தது பழைய நினைவுகளை தூண்டுகிறது. இங்கு பல கிடாய்கள் திறம்பட விளையாடின. ஜல்லிக்கட்டு போட்டியைப் போல் பெரிய பரிசுகள் கொடுக்காமல் பாரம்பரிய முறைப்படி அண்டா, குண்டா வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது” என்றார்.