தேனி மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக நீர் நிலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா அறிவுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்தியில்,


இந்திய வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்திற்கு 16.05.2024 அன்று மஞ்சள் எச்சரிக்கையும் (கனமழை), 17.05.2024, 18.05.2024, 19.05.2024 ஆகிய நாட்களில் ஆரஞ்ச் எச்சரிக்கையும் (மிக கனமழை) 20.05.2024 அன்று சிவப்பு எச்சரிக்கையும் (அதிகனமழை)  ஆகிய நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே,  அனைத்து வட்டத்திலும் உள்ள கண்மாய், குளங்கள் மற்றும் ஊரணிகளில் நீர் நிரம்ப உள்ளதால் வெள்ளப்பெருக்கின்போது அவசரகால பணியினை மேற்கொள்ள அனைத்து துறையினருக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.




கனமழை எச்சரிக்கை, மாவட்ட நிர்வாகம் அலர்ட்


ஆற்றங்கரைப் பகுதிகளில் வசிக்கின்ற பொது மக்கள் கவனமுடனும், முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும், முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு, சோத்துப்பாறை அணை மற்றும் வைகை அணை ஆகிய ஆறுகளில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆற்றங்கரைப்பகுதிகளில் விளையாடவோ, குளிக்கவோ அனுமதிக்க கூடாது. நீர்நிலைகளில் அதிக நீர்வரத்து உள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ மற்றும் வேறு காரணங்களுக்காகவோ நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாமென ஒலிபெருக்கி மூலம் உள்ளாட்சி அமைப்பினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.




வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு


மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால்களில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். நீர்வீழ்ச்சிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வேண்டாம். வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக (Vulnerable Area)  கண்டறியப்பட்டுள்ள 43 பகுதிகளை கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவசர காலங்களில் வெள்ளம் மற்றும் மழையினால் பாதிப்புக்குள்ளாகும்  மக்களை தங்கவைக்க அனைத்து அடிப்படை வசதிகள் உடைய 66 தங்கும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.  




அவசர கால தகவல் தொடர்பு வசதி எண் அறிவிப்பு


அவசர காலங்களில் அணைகளை திறக்க நேரிட்டால் உடனே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் மக்களை வேறு இடத்திற்கு செல்லுமாறு  அறிவுறுத்த தகவல் தொடர்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெள்ளப் பாதிப்புகள் குறித்த புகார்களை தெரிவித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து வரப்பெறும் புகார்களை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பகுதி அலுவலர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் மழை, வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர் தொடர்பான தங்களது புகார்களை 04546 - 250101 என்ற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.