Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் மனைவி அனிதா கோயல் தெற்கு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 70.  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்ப வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


நரேஷ் கோயலின் மனைவி உயிரிழப்பு:


ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கட்டமைத்ததில் நரேஷ் கோயலின் மனைவி அனிதா பெரும் பங்காற்றினார். ஆனால், நிதி நெருக்கடி காரணமாகவும் கடன் சுமை காரணமாகவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மூடப்பட்டது. கடன் மோசடி வழக்கில் சிக்கி நரேஷ் கோயல் சிறையில் அடைக்கப்பட்டார்.


2 மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த நரேஷ் கோயல், தனது மனைவி இறக்கும் வரை உடன் இருந்து கவனித்து கொண்டதாகக் கூறப்படுகிறது.


நரேஷ் கோயல், அனிதா கோயல் தம்பதிக்கு நம்ரதா மற்றும் நிவான் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மும்பையில் இன்றே இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாக அனிதாவின் உடல்நிலை மோசமடைந்து வந்துள்ளது.


புற்றுநோய் முற்றிவிட்டதால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலன் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. நரேஷ் கோயலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 



நெருக்கடியால் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்:


தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான உயர்ந்த இந்நிறுவனம் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு நஷ்டத்தை சந்திக்க தொடங்கியது. இது விமானத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இதனால் அந்த நிறுவன பங்குகளும் பெரும் வீழ்ச்சி கண்டது. இதனால் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்நிறுவனம் விமான சேவையை நிறுத்தியது. இதனிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை 2021 ஆம் ஆண்டு ஜாலான் - கால்ராக் வாங்கியது.


இப்படியான நிலையில்  நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா ஆகியோர் கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மே மாதம் சிபிஐ சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


இதனைத் தொடர்ந்து சிபிஐ வெளியிட்ட அறிக்கையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்களிடம் இருந்து கடன்களை பெற்று நிறுவனத்திற்காக அல்லாமல் வேறு விஷயங்களுக்காகவும் பயன்படுத்தியுள்ளது. 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை ரூ.1,152 கோடி வாங்கி விட்டு அதில் ரூ.420 கோடி எந்தவித சம்பந்தமும் இல்லாத நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.