”இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இதற்கான ஒன்றிய அரசின் அனுமதியும் தற்போது கிடைத்துள்ளது. இதன் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.



இந்த சூழ்நிலையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவியினை செய்ய வேண்டிய தருணம் இது. எனவே மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருந்தார்.




இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் பசிபட்டினியோடு உணவு, மருந்து உள்ளிட்டவற்றிற்கும் அவதிப்பட்டு வருகின்றனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உணவு மட்டும் அடிப்படைத் தேவை பொருட்கள் கிடைக்காமல் பரிதவிக்கின்ற இலங்கை மக்களுக்கு, தமிழக அரசு சார்பில் மனிதாபிமான அடிப்படையில்  நிதி மற்றும் பொருள் உதவி அளிப்பது என முதல்வர் அறிவித்து இருந்தார். தாராளமாக உதவும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கின்றார்.







அதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் பயிலும் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்., இலங்கையில் அவதிப்படும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியாக தங்கள் பெற்றோர் தினசரி திண்பண்டம் வாங்க கொடுத்த சிறுசிறு தொகையை நிவாரணமாக வழங்கினர்.



எல்.கே.ஜி முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மழலைகள் அளித்த நிவாரண தொகையுடன் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்கள் பங்களிப்பை வழங்கி அதன் மூலம் கிடைத்த 5 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைத்தனர். இதே போல் மற்றவர்களும் தங்களது பங்களிப்பை வழங்கும் பட்சத்தில் இலங்கையில் உள்ள மக்கள் கஷ்டத்திலிருந்து வெளியே வருவார்கள் என மழலைகள் தெரிவித்தனர்.