மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைவுபடுத்துவது பற்றி நான் நாடாளுமன்றத்தில் விதி எண் 377-இன் கீழ் எழுப்பி இருந்தேன். அதன் அடிப்படையில் ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் மற்றும் ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல செயலாளரிடம் இருந்து கடிதங்கள் வந்துள்ளன. டிசம்பர் 2018-இல் ரூ 1264 கோடி மதிப்பீட்டில் மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கான ஒப்புதல் தரப்பட்டது. 150 படுக்கை கொண்ட தொற்று நோய்ப்பிரிவு ஒன்றை துவக்குவது என்ற புதிய முடிவின் காரணமாக திட்ட மதிப்பீடு ரூ 1264 கோடியில் இருந்து ரூ 1977.8 கோடியாக உயர்த்தப்பட்டது.
ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 26.03.2021 அன்று கையெழுத்தானது, மொத்த நிதித் தேவையான ரூ 1977.8 0 கோடிகளில் ஜெய்கா கடன் ரூ 1627.7 கோடிகளை ஜெய்கா நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசின் பங்கு தொகை பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும், அக்டோபர் 2026-க்கு உள்ளாக எய்ம்ஸ் பணிகள் முடிக்கப்படுமென்றும் ஒப்பந்தம் தெரிவிக்கிறது. வளாகச் சுற்றுச் சுவர் உள்ளிட்ட முன் முதலீட்டு பணிகளில் 92 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
திட்ட மேலாண்மை ஆலோசகரை முடிவு செய்வதற்கான உலகளாவிய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது, எய்ம்ஸ் என்பது மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய கனவு, இதன் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும், நிர்வாக ரீதியான முடிவுகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும், ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் மதுரை எய்ம்ஸ் பற்றி ஏதாவது ஒருவகையில் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறோம், பணிகள் மேலும் தாமதமாகாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம்" என கூறினார்
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : கோவில் திருவிழாவில் ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் அடித்துக்கொண்ட விநோத நிகழ்வு..