தேனி அருகே பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலத்தினை 8 ஆண்டுகளுக்கு முன் தனியாரை சேர்ந்த சில நபர்கள் தங்கள் பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்து கொண்டதாக தேனி மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. 




அரசு நிலம், தனிநபர்களுக்கு மாற்றி பட்டா வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பாக பெரியகுளம் அடுத்த வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் அரசு நிலம் தனியாருக்கு பட்டா மாற்றி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலங்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அதில் அரசுக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலங்கள் சட்டவிரோதமாக தனிநபர்கள் சிலருக்கு பட்டா மாற்றி வழங்கப்பட்டது தெரியவந்த நிலையில், இது தொடர்பான விசாரணை அறிக்கையை வருவாய்துறை அதிகாரிகளை கொண்ட சிறப்பு விசாரணை குழுவினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். 



 


வருவாய் துறை அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பட்டா மாற்றம் நடைபெற்ற கால கட்டத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்த விசாரணையை மாவட்ட ஆட்சியர் தொடங்கிய போது , பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வந்த சக்திவேல் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார், போடி தாசில்தார் ரத்தினமாலா, போடி துணை தாசில்தார் மோகன்ராம், ஆண்டிப்பட்டி துணை தாசில்தார் சஞ்சீவ்காந்தி ஆகிய 4 பேரும் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.



இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் பணி இடைநீக்கம் செய்ய தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்ட நிலையில், ஆட்சியரின் இந்த விசாரணை நடவடிக்கையில் மேலும் சில முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தேனியில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் சிலர் கடும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசுக்கு சொந்தமான 90 ஏக்கர் நிலத்தினை சில அரசு அதிகாரிகள் திட்டமிட்டு தனிநபர்களின் பெயருக்கு மாற்றி இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதுடன், அரசு நிலங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பி உள்ளது. 


மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


தேனி: சாலை வசதி கேட்டு சாலையில் சமைத்து போராட்டம் நடத்தும் மலை கிராம மக்கள்...!


தேனி : ஊருக்குள் அதிகரித்த காட்டு யானைகளின் நடமாட்டம் : அச்சத்தில் கிராம மக்கள்..