நடப்பு ஐபிஎல் தொடரின் 45வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து விச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய குஜராத் அணியின் இன்னிங்ஸை கேப்டன் கில் மற்றும் சாஹா தொடங்கினர். இருவரும் நிதானமாக ஆடி சிறப்பான தொடக்கம் தருவார்கள் என நினைத்துக் கொண்டு இருந்தபோது, பெங்களூரு அணி தரப்பில் முதல் ஓவரை வீசிய ஸ்வப்னைல் பந்தில் சாஹா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த சுதர்சன் கேப்டன் கில்லுடன் இணைந்து நிதானமாக ரன்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். குஜராத் அணியால் தனது சொந்த மண்ணில் பவர்ப்ளேவில் ஆதிக்கம் செலுத்தவே முடியவில்லை. பெங்களூரு அணியின் சிறப்பான பந்து வீச்சினால் குஜராத் அணியால் அதிரடியாக பவுண்டரிகள் கூட விளாசமுடியவில்லை. பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 42 ரன்கள் சேர்த்து விளையாடி வந்தது.
ஆட்டத்தின் 7வது ஓவரில் சிக்ஸர் விளாச முயற்சி செய்து கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவர் தனது விக்கெட்டினை மேக்ஸ்வெல் பந்தில் இழந்தார். 19 பந்துகளை எதிர்கொண்ட கில் 16 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து களத்திற்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஷாரூக் கான் ஏற்கனவே களத்தில் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த விரர் சாய் சுதர்சனுடன் இணைந்தார். இவர்கள் இருவரும் தொடக்கத்தில் சில பந்துகளை மட்டும் பொருமையாக எதிர்கொண்டனர். ஆட்டத்தின் 8வது ஓவரில்தான் குஜராத் அணி தனது முதல் சிக்ஸரை விளாசியது.
தொடர்ந்து சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடிய ஷாருக் கான் மற்றும் சுதர்சன் கூட்டணி குஜராத் அணியை வலுவான நிலைக்கு கொண்டு செல்லும் பணியை செவ்வனே செய்தது. இவர்கள் கூட்டணி 27 பந்தில் 50 ரன்களை எட்டியது. சிக்ஸர் விளாசுவதில் அதிக கவனம் செலுத்திவந்த ஷாருக் கான் சிக்ஸர் விளாசி தனது அரைசதத்தினை எட்டியது மட்டும் இல்லாமல் அணியின் ஸ்கோரையும் 100 ரன்களைக் கடக்க வைத்தார். ஐபிஎல் தொடரில் இதுதான் சுதர்சனின் முதல் அரைசதம் ஆகும்.
இவர்கள் கூட்டணியைப் பிரிக்க பெங்களூரு அணி எடுத்த முயற்சிகளுக்கு 15வது ஓவரில்தான் பலன் கிடைத்தது. அந்த ஓவரை வீசிய முகமது சிராஜ் பந்தில் ஷாரூக் கான் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். ஷாருக்கான் மற்றும் சுதர்சன் கூட்டணி 45 பந்தில் 86 ரன்கள் சேர்தத நிலையில் பிரிந்தது. ஷாரூக் கான் 30 பந்தில் 58 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் 3 பவுண்டரியும் 5 சிக்ஸரும் அடங்கும்.
கடைசி சில ஓவர்களில் அதிரடியாக சிக்ஸர்களையும் ஹாட்ரிக் பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார் சாய் சுதர்சன். 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுளை இழந்து 200 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை களத்தில் இருந்த சுதர்சன் 49 பந்தில் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 84 ரன்கள் குவித்திருந்தார்.