சித்திரைத் திருவிழா 2024

 

உலக புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா அதன் நிறைவு பகுதியை எட்டி உள்ளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்த ஸ்ரீ கள்ளழகர் பெருமான்  தனது இருப்பிடமான அழகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகள்ளழகர் கோவில் வந்து சேர்ந்தார். 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும் அழகர்கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்க பல்லக்கில் புறப்பட்டார். இந்நிலையில் கள்ளழகரை வரவேற்கும் விதமாக மூன்றுமாவடி என்ற இடத்தில் எதிர்சேவை  என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 23-ஆம் தேதி பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் 24-ஆம் தேதி தேனூர் மண்டபம் சென்ற அவர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார்.

 

கோவிந்தா! கோவிந்தா

 

வழி நெடுகிலும் 480-க்கும் மேற்பட்ட மண்டபப்படிகளில் எழுந்தருளிய ஸ்ரீகள்ளழகர் அங்கு பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து நேற்று கோவிந்தா! கோவிந்தா! என்ற கோஷங்கள் முழங்க பக்தர்களிடம் இருந்து பிரியா விடைபெற்ற அவர் மதுரையில் இருந்து தனது இருப்பிடம் நோக்கி புறப்பட்டார்.

 

இந்நிலையில் நேற்று இரவு அப்பன்திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் தங்கிய கள்ளழகர் இன்று காலை கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி வழியாக அழகர்கோவில் வந்து சேர்ந்த கள்ளழகர் ராஜ கோபுரத்தில் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலுக்குச் சென்றார்.

 

அங்கு அவருக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து உட்புற கோட்டைக்குள் நுழைந்த அவரை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா! என்று கோஷங்கள் முழங்க மலர்களை தூவி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

 

அழகருக்கு வரவேற்பு

 

திருக்கல்யாண மண்டபத்தின் முன்பு கூடியிருந்த சுமங்கலி பெண்கள் பூசணிக்காய் மீது சூடம் ஏற்றி கள்ளழகருக்கு திருஷ்டி கழித்து அதனை தரையில் போட்டு உடைத்தனர். அதனைத் தொடர்ந்து கோவிலுக்குள் சென்றார் கள்ளழகர். நாளை திருக்கோவில் நடைபெறும் உற்சவ சாந்தி நிகழ்ச்சியோடு அழகர் கோவில் பத்து நாள் சித்திரை திருவிழா நிகழ்ச்சியானது இனிதே நிறைவு பெறுகிறது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருப்பதால் மதுரை பெரியார் பேருந்து நிலையம் மேலூர், நத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

 

மேலும் பாதுகாப்பு பணிக்காக பெண் காவலர்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.