உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ஆளுயர சிலை வைத்து கோயில் கட்டியுள்ள சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது.
யோகியின் தீவிர பற்றாளர்
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமியிலிருந்து சரியாக 25 கி.மீ தொலைவில் உள்ள பாரகுந்த் என்னும் பகுதியில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பாஜக தொண்டர் ஒருவர் சிலை வைத்து கோயில் கட்டியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய அதே நாளில் இந்த கோயிலுக்கும் அந்த பக்தர் அடிக்கல் நாட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பாஜகவைச் சேர்ந்தவரும், யோகி ஆதித்யநாத்தின் தீவிரப் பற்றாளருமான பிராபர் மவுரியா என்பவர் இந்த கோயிலைக் கட்டியுள்ளார்.
பைசாபாத்தில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் நெடுஞ்சாலையில், ராம்ஜென்மபூமியிலிருந்து 25கி.மீ தொலைவில் பாராகுந்த் என்ற நகரம் அமைந்துள்ளது. ராமர் ஆட்சியைவிட்டு செல்லும்போது அவரின் சகோதரர் பரதன், பாராகுந்த் வரை வந்து வழியனுப்பி வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த இடத்தில் சிலை வைத்ததன் மூலம் யோகிக்கு தெய்வத்தன்மை உள்ள பிம்பத்தை உருவாக்க முயன்றிருக்கிறார் அவரது தீவிர ஆதரவாளர்.
ராமர் கோயில்
ஆதித்யநாத்துக்கு கோயில் கட்டியது குறித்து பிரபாகர் மவுரியா கூறுகையில் “சில வருடங்கள் முன்பு அயோத்தியில் ராமர் கோயில் காட்டலாம் என்ற தீர்ப்பு வந்தது. தற்போது ராமருக்கு அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் கோயில் கட்டி வருகிறார். இந்த செயலை செய்த அவருக்கு நான் கோயில் கட்டியிருக்கிறேன். உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பணிகளைப் பார்த்து வியப்படைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் கோயில்
இந்த கோயிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆளுயர சிலையும் தலைக்குப் பின்புறம், வில், அம்பு சிலையும், மூலஸ்தானத்தைச் சுற்றி காவி வண்ணத்தில் அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. எல்ல கோயில்களையும் போல தினசரி இரு வேளை பூஜையும், பூஜை முடிந்தபின் இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. இந்த கோயிலை கட்டுவதற்கு அவருக்கு 8.5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. கோயிலில் உள்ள யோகி சிலை ராஜஸ்தானில் செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
யூட்யூப் வருமானம் மூலம் கட்டினேன்
இவ்வளவு செலவு செய்த அவருக்கு பெரிய சொத்துக்கள் ஒன்றும் கிடையாது. அவர் வேலைக்கும் செல்வதில்லை. ஆனாலும் எப்படி கோயில் கட்டினீர்கள் என்று கேட்டபோது, "எனக்கு எந்த வேலையும், சொத்துகளும் இல்லாத நிலையிலும் எவ்வாறு இந்த கோயில் கட்டினீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். நான் பஜனை பாடல்கள் நன்றாகப் பாடுவேன், ஏராளமான பஜனைப் பாடல்களை பாடி யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறேன். இதன் மூலம் மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் வருகிறது. அந்த பணத்தில்தான் இந்த கோயில் கட்டினேன். மக்களுக்காக யோகி ஆதித்யநாத் செய்த பணிகளால் கடவுள் நிலைக்கு உயர்ந்துவிட்டார். அதன் காரணமாகதான் எனக்கு அவருக்காக கோயில் கட்டும் எண்ணம் வந்தது. ராமருக்கு மந்திரம் சொல்லி வழிபாடு செய்வதைப் போலவே யோகிக்கும் வழிபாடு செய்கிறேன்", என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்