டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று காலை 11 மணி அளவில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் சந்திக்கிறார். ஓபிஎஸ் உடன் மோதல் தொடரும் நிலையில், அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஈபிஎஸ் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்கிறது. இந்த சந்திப்புக்கு பிறகு பழனிசாமி ஒரே நாளில் சென்னை திரும்பலாம் அல்லது ஓரிரு நாட்கள் டெல்லியில் தங்கியிருந்து முக்கிய தலைவர்களை சந்திக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை விழாவில் பங்கேற்பதற்காக ஜூலை 24-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தபோது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைப்பதற்காக மோடி சென்னை வந்தபோது, விமான நிலையத்தில் மட்டுமே பிரதமரை மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க முடிந்தது.
ஒற்றை தலைமை:
அ.தி.மு.க., ஒற்றைத் தலைமைப் பிரச்சினையில் சிக்கியுள்ள நேரத்தில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கணிசமான இடங்களைப் பெற அதிமுக - பாஜக கூட்டணி வியூகங்களை வகுத்து வருவதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, அமித் ஷா, வி.கே.சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சியுடன் அதிமுக கட்சியின் இணைக்குமாறு ஈபிஎஸ்-க்கு அறிவுறுத்தியதாகவும், ஆனால் அதை ஈபிஎஸ் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பழனிசாமியை கடுமையாக எதிர்க்கும் அதே வேளையில், கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஓ பன்னீர்செல்வத்தின் அழைப்பை ஆதரித்து வருகிறார்.
நட்டா வருகை:
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வருகிற செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார். மதுரை மற்றும் காரைக்குடியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்.