இந்து மதத்தை அவமதித்து பேசியதாக சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக திமுக எம்.பி. ஆ ராசா மீது பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆ ராசா இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். 


இந்த நிலையில், நேற்று தி. நகரில் திமுக முப்பெரும் விழா நடைப்பெற்றது. அதில் திமுக எம்.பி ஆ ராசா கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ யார் தப்பு பண்ணாலும் மன்னிப்பு கேட்கணும். நான் மன்னிப்பு கேட்க தயார். எதுக்கு மன்னிப்பு கேட்கணும் சொல்லு. தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி பதவி ஏற்கும்போது என்ன சொல்லி பதவி ஏற்றார். ஆர்.என். ரவியாகிய நான் அரசியல் சட்டத்தை காப்பாற்றுவேன் என்று சொன்னீங்களே! 



இந்தியாவிற்கு அரசியல் சட்டம் வந்துருச்சுல அப்புறம் சனாதனம் எங்க இருந்து வந்துச்சு..? சனாதனம் பேசுகிற இந்துதான் ஆர்.என்.ரவி. அரசியல் சட்டம் எடுத்துகொண்ட ஆர்.என். ரவி என்ன சொல்லுகிறார் சனாதனம் தர்மம் சிறந்தது என்று. அந்த சனாதனத்தில்தான் இத்தனையாவது அத்தியாயத்தில் இப்படி எங்களை நீ குறிச்சு வைச்சிருக்கன்னு நான் சொன்னேன். 



அரசியல் சட்டத்தின்படி பதவியேற்றுக்கு கொண்ட ஆளுநர் ரவி, அரசியல் சட்டத்தை காலில்போட்டு மிதித்துவிட்டு, சனாதன தர்மம்தான் பெரிது என்று கூறுகிறார். அதனால்தான் இந்துகளை பற்றி சனாதன தர்மத்தில் சொல்லியதை நான் வெளிப்படையாக தெரிவித்தேன். நான் இந்துகளுக்கு எதிரியல்ல, இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படுகிற சனாதன தத்துவத்திற்கு எதிரி. அந்த சனாதனத்தை வீழ்த்தாதவரை அரசியல் சட்டம் வாழாது. அரசியல் சட்டம் வாழவிட்டால் இந்தியா ஒரு நாடாக இருக்காது. எனவே அனைவரும் சனாதனத்தை ஒழிப்போம்” என்று பேசினார்