சமீப நாட்களாக வளர்ப்பு பிராணிகள் தாக்குதல் தொடர்பான செய்திகளை பார்க்க முடிகிறது. இச்சம்பவங்கள் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வீட்டு பூனை கடித்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் ஷிகாரிபூர் தாலுகாவில் உள்ள தர்லகட்டா கிராமத்தைச் சேர்ந்த 50 வயது பெண் கங்கிபாய் என்பவர் பூனை கடித்ததால், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பூனை கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன், பெண்ணின் காலில் அவரது வளர்ப்பு பூனையானது கடித்துள்ளது. தர்லகட்டாவில் உள்ள முகாமில் ஒரு இளைஞரை முதலில் தாக்கிய பூனை, பின்னர் அந்த பெண்ணை கடித்துள்ளது.
பூனை கடித்ததால், அந்த பெண் சில ஊசிகளை எடுக்க வேண்டியிருந்தது. பின்னர் ஒரு ஊசி போட்ட பிறகு அவள் குணமடைந்தாள். மற்ற ஊசிகள் போடவில்லை. இந்நிலையில் ஊசி போடாத அலட்சியம் பெண்ணின் உயிரைப் பறித்ததாக கூறப்படுகிறது.
மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பெரும்பாலும் நாய் கடியால் ஏற்படுகிறது. இந்நிலையில் பூனையால் பரவிய நோயால் அந்த பெண் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு, ரேபிஸ் நோய்த்தொற்று காரணமாக ஒரு வாரத்தில் அரசு ஆசிரியரும் அவரது 24 வயது மகனும் இறந்ததாக கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் அக்பர்பூர் நகரில் இருவரும் அவர்களது செல்லப் பூனை கடித்து கீறியதால் தொற்று பரவியதாக கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் விலங்கு கடித்தால் ஏற்படும் காயங்களில் 2-50 சதவிகிதம் பூனை கடித்தால் ஏற்படுகிறது, நாய் கடிக்கு அடுத்தபடியாக, பூனைக் கடியால் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. “பூனை கடித்தால் ரேபிஸ் வைரஸ் தொற்று மற்றும் பார்டோனெல்லா, புருசெல்லா, லெப்டோஸ்பைரா மற்றும் கேம்பிலோபாக்டர் தொடர்பான பல பாக்டீரியா தொற்றுகள் ஏற்படுகின்றன என்றும், பூனை கடித்ததால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு, நாய் கடித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.