மேற்குவங்கம் மாநிலத்தில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மேற்குவங்கத்தில் அதிர்ச்சி சம்பவம்: கொல்லப்படுவதற்கு முன்பு அவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது உடற்கூறாய்வில் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொதித்தெழுந்துள்ளார். தேவைப்பட்டால் குற்றவாளிகளை தூக்கில் போடுவேன் என அவர் கூறியுள்ளார்.
ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்தான் கொல்லப்பட்ட பெண், படித்து வந்துள்ளார். இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவரான அவர், நேற்றுமுன்தினம் (வியாழன்) இரவு தாமதமாக உணவு சாப்பிட்டுவிட்டு மூன்றாவது மாடியில் உள்ள செமினார் ஹாலில் படிக்கச் சென்றார். மறுநாள் காலை அவர் சுயநினைவின்றி காணப்பட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள், அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். இதுதொடர்பாக பேசிய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயல், "பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுயநினைவின்றி காணப்பட்ட பெண் மருத்துவர்: மூன்று டாக்டர்கள் குழு பிரேத பரிசோதனை செய்தது. முழு செயல்முறையும் வீடியோ மூலம் ஆவணப்படுத்தப்பட்டது. பிரேத பரிசோதனையின்போது மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் சாட்சிகளாக இருந்தனர். உடலில் பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகள் தென்பட்டன" என்றார்.
பெண்ணின் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆளுங்கட்சிக்கு பெரும் நெருக்கடியாக மாறிய நிலையில், தேவைப்பட்டால் குற்றவாளிகளை தூக்கில் போடுவேன் என முதலமைச்சர் மம்தா உறுதி அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தேன். இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். நான் மரண தண்டனைக்கு ஆதரவானவன் அல்ல என்றாலும், தேவைப்பட்டால், குற்றவாளி தூக்கிலிடப்படுவார். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்றார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.