இந்திய வைரஸ் அல்ல இனி 'டெல்டா வேரியன்ட்' என்றழைக்கவும்: உலக சுகாதார அமைப்பு



'பி.1.617' வகை உருமாறிய கொரோனா வைரஸை, 'இந்திய வகை' என்று அழைக்கக் கூடாது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதனை டெல்டா வேரியன்ட் என்றழைக்கலாம் என உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட  முதல் நோயாளி சீனாவில் இருந்ததால், இதனை சீன வைரஸ் என அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைத்து வந்தார். மேலும், சீனாவின் வூஹான் நகரின் ஆய்வகத்திலிருந்தே இந்த வைரஸ் வெளியேறியதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இதனால், சீன வைரஸ் என்றே அவர் தொடர்ந்து கூறி வந்தார்.
இதற்குக் கடும் எதிர்ப்பை சீனா பதிவு செய்தது. பின்னர், கொரோனா வைரஸை எந்த ஒரு நாட்டின் பெயருடனும் சேர்த்து அழைக்கக் கூடாது என உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டது.





இந்நிலையில், உலக நாடுகள் பலவும் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலையில் சிக்கியுள்ளன. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் வீச்சுக்கு 'பி.1.617' என்ற உருமாறிய கொரோனா வைரஸே காரணம் என அறிஞர்கள், மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கண்டறிந்தனர்.
இதனையடுத்து உலகில் ஆங்காங்கே இந்த வகை உருமாறிய வைரஸ் தொற்று ஏற்படுபவர்களை இந்திய வகை வைரஸால் பாதிக்கப்பட்டவர் என அடையாளப்படுத்தும் வழக்கம் தொடங்கியது.
உள்ளூர் ஊடகம் தொடங்கி சர்வதேச ஊடகம் வரை அனைவருமே, இந்திய வைரஸ் எனக் குறிப்பிடத் தொடங்கினர். இந்நிலையில், 'பி.1.617' வகை உருமாறிய கொரோனா வைரஸை, 'இந்திய வகை' என்று அழைக்கக் கூடாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


தடுப்பூசி இலக்குகளை தவறாக நிர்ணயிக்கிறதா? மத்திய அரசு
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் கூறும்போது, கொரோனா வைரஸின் உருமாற்றங்களைக் கண்டறிந்து தெரிவிப்பதால் உலகில் எந்த ஒரு நாடும் ஒதுக்கப்படக் கூடாது. ஒரு நாட்டின் பெயரை சேர்த்து வைரஸைப் பட்டியலிடுவது அதன் அறிவியல் பெயருக்கு மாற்றாகாது. அதனால், உருமாறிய வகைகளுக்கு கிரேக்க அகரவரிசைகளான ஆல்ஃபா, பீட்டா, காமா என்ற வரிசையைப் பயன்படுத்துகிறோம், இது எளிதாகவும் நடைமுறைக்கு உகந்ததாகவும் இருக்கும். அந்த வகையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட 'பி.1.617' வகை உருமாறிய கொரோனா வைரஸை, டெல்டா வேரியன்ட் என்றழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
SARS-CoV-2 என்பதுதான் ஒரிஜினல் கொரோனா வைரஸ். அதன் உருமாற்றங்களுக்கு பிரேசில் வேரியன்ட், யுகே வேரியன்ட், தென் ஆப்பிரிக்க வேரியன்ட், இந்திய வேரியன்ட் என்றெல்லாம் ஊடகப் பெயர்கள் உலா வந்தன.
இந்தியாவில் இரண்டாவது அலையில் கண்டறியப்பட்ட வைரஸ், இரட்டை உருமாற்றம் கொண்ட வைரஸ். இந்த வைரஸின் மரபணுவில் E484Q, L452R என இரு உருமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனால் இந்த வகை வைரஸை இனி  டெல்டா வேரியன்ட் என்றழைக்கலாம். அதேபோல், இதற்கு முன்னதாக இந்தியாவில் இருந்த கரோனா வைரஸுக்கு 'கப்பா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
டெல்டா வேரியன்ட் கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 53 பிராந்தியங்களில் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.


காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்