பேருந்துக்கு 'இஸ்ரேல் டிராவல்ஸ்' என்று பெயர் சூட்டியதற்காக போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சிலர் பேருந்தின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.


இஸ்ரேல் டிராவல்ஸ்:



கர்நாடகாவின் தக்ஷின கன்னடா மாவட்டத்தில் உள்ள பேருந்து உரிமையாளர் ஒருவர், அவரது பேருந்துக்கு இஸ்ரேல் டிராவல்ஸ் என பெயர் வைத்து இயக்கி வந்தார்


தற்போது, இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையே போரானது தீவிரத்தை அடைந்துள்ளது. மேலும் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையேயான மோதலும் உலகளவிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த பதற்றமான சூழலானது உலகளவிலும் பரவியுள்ளது என்றே சொல்லலாம். 


வெடித்த சர்ச்சை:


இந்த தருணத்தில், கர்நாடக மாநிலத்தில் இஸ்ரேல் டிராவல்ஸ் என்ற பெயர் உள்ள பேருந்து இருப்பது அங்குள்ளவர்களின் கவனத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சிலர், அந்த பேருந்தின் புகைப்படத்தை  சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இதையடுத்து, இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலானது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 


அதற்கு  சிலர் 'இஸ்ரேல் டிராவல்ஸ்' என்று பெயரிட்டதற்காக வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறையிடம் புகார் வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தனது பேருந்தின் பெயரை 'இஸ்ரேல் டிராவல்ஸ்' என்பதில் இருந்து 'ஜெருசலேம்' என மாற்றினார்.


ஏன் பெயர் வைத்தேன்?



  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேருந்து உரிமையாளர் லெஸ்டர் கட்டீல், நான் 12 ஆண்டுகளாக இஸ்ரேலில் பணியாற்றியதால், தனது பயண நிறுவனத்திற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டினேன். “நான் இந்தியா திரும்புவதற்கு முன்பு இஸ்ரேலில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்தேன்.  எனக்கு வேலை வாய்ப்பை வழங்கிய நாட்டிற்கு மரியாதை நிமித்தம் பெயர் வைத்தேன். 


நான் எனது பயண நிறுவனத்தைத் தொடங்கியபோது, இஸ்ரேலின் பெயரை வைக்க நினைத்தேன்.  ஆனால் சில தரப்பினர் ஏன் அதை எதிர்த்தனர் என்பது எனக்குத் தெரியவில்லை. சிலருக்கு ஏன் 'இஸ்ரேல் டிராவல்ஸ்' உடன் பிரச்னை என்று எனக்குப் புரியவில்லை. காவல்துறை எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றாலும், பெயரில் ஏதேனும் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக மாற்றத்தை செய்ய முடிவு செய்தேன் என பேருந்தின்  உரிமையாளர் தெரிவித்தார்.


இந்நிலையில், இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.