மத்தியப் பிரதேசத்தில் குஜராத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) இணைந்து நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளது.


எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.


மத்திய பிரதேசத்தில் பரபரப்பு:


இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் அருகே பக்ரோடா தொழில்பேட்டையில் போதைப்பொருள் கும்பலை குஜராத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) அதிகாரிகள் வளைத்து பிடித்தனர். 


அவர்களிடம் நடத்திய சோதனையின்போது, சுமார் 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள மெபெட்ரோன் (எம்டி) போதைப் பொருட்களை அதிகாரிகள் மீட்டனர். நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.


சோதனை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சுமார் 2,500 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு கொட்டகைக்குள் உள்ள தொழிற்சாலைக்குள் போதைப்பொருளை தயாரித்து வந்துள்ளனர். அங்கு, நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களில் வந்த குஜராத் ATS அதிகாரிகள், NCB அதிகாரிகளுடன் இணைந்து சோதனை நடத்தினர். சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நாட்டை அதிரவிட்ட கடத்தல்:


அதில், ஒருவர் சன்யால் பிரகாஷ் பேன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், மும்பையில் உள்ள அம்போலியில் 2017ஆம் ஆண்டு இதேபோன்று போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் சன்யால் பிரகாஷ் பேன் கைது செய்யப்பட்டார் என்பது தெரியவந்தது.


ஐந்து வருட சிறைவாசத்திற்குப் பிறகு, அவர் அமித் சதுர்வேதியுடன் இணைந்து சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு காலம் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர், போதைப்பொருள் எங்கு விற்கப்பட்டது, அதில் ஈடுபட்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


சமீபத்தில், மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.