ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினம் தொகுதியில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்பியாக உள்ளவர் சத்யநாராயணா. இவரது மனைவி ஜோதி, மகன் சரத்.  சத்தியநாராயணா, ஐதராபாத்திற்கு சென்றிருந்த நிலையில்,  பிரபல ரவுடி ஹேமந்த் தலைமையிலான கும்பல் விசாகப்பட்டினம் ருசி கொண்டாவில் உள்ள சத்தியநாராயணாவின் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள், வீட்டில் இருந்த சத்யநாராயணாவின் மகன் சரத்திடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு பின், சத்தியநாராயணாவின் மனைவி ஜோதியிடம் நகைகளை எடுத்து வருமாறு கூறியுள்ளனர். அவர் வீட்டில் இருந்து நகைகளை எடுத்து வந்து ரவுடிகளிடம் கொடுத்த நிலையில்  அவர்கள் ஜோதியையும் பிடித்து வைத்துக் கொண்டனர். 


பின்னர் மனைவி ஜோதியை மிரட்டி, ஆடிட்டர் வெங்கடேஸ்வரராவை வரவழைத்தனர். அங்கு வந்த ஆடிட்டரையும் பிடித்து வைத்துக்கொண்ட கும்பல் ஒரு கோடி எடுத்து வருமாரு கூறி மிரட்டியுள்ளனர். இதனையடுத்து ஆடிட்டரின் ஓட்டுநர் ஒரு கோடி ரூபாய் பணத்தை கொண்டு வந்து ரவுடி கும்பலிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது மனைவி மகன் கடத்தப்பட்டதை அறிந்த சத்தியநாராயணா நேற்று முன் தினம் காலை விசாகப்படினம் காவல் ஆணையருக்கு தகவல் கொடுத்தார். 


உடனடியாக அந்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் வீட்டிற்கு வந்த போது ரவுடி கும்பல் எம்.பி.யின் மனைவி, மகன், ஆடிட்டருடன் காரில் தப்பியது. அந்த காரை துரத்திச்சென்ற போலீசார் அனந்தபுரம் அருகே அந்த காரை துரத்திப் பிடித்தனர். காரில் கடத்தப்பட்ட 3 பேரையும் மீட்டனர். கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். 


பிரபல ரவுடி ஹேமந்த் மீது கொலை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் இதற்கு முன்னதாக எம்.பி சத்தியநாராயணா குடும்பத்துடன் தொடர்பில் இருந்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால் அவருக்கும் தனக்கும் எந்த விரோதமும் இல்லை என்றும் பணம் பறிப்பதற்காகவே இந்த கடத்தல் நடத்தப்பட்டிருப்பதாகவும் சத்தியநாராயணா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார். இந்த கடத்தல் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் படிக்க 


Biparjoy Cyclone: பிபர்ஜாய் புயலின் ஆட்டம்.. வெள்ளக்காடாக மாறிய குஜராத்.. 1000 கிராமங்கள் இருளில் மூழ்கிய சோகம்..


Minister without portfolio: இலாகா இல்லாத அமைச்சர்கள்.. நேரு ஐடியாவில் முதலமைச்சர் ஸ்டாலின்... பலன் என்ன?